*விபத்துகள் ஏற்படும்முன் விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்
வடலூர் : குண்டும், குழியுமாக உள்ள விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை கோலியனூர், கண்டரக்கோட்டை, பண்ருட்டி, காடாம்புலியூர், நெய்வேலி ஆர்ச் கேட், வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியாக செல்கிறது. தினம்தோறும் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது.
போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குறுகலாக இருந்ததால், விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் வரையிலான சுமார் 175 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் நான்கு வழிச்சாலையாக கடந்த 2006ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து 2010ம் ஆண்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு விக்கிரவாண்டி- கும்பகோணம் இடையே உள்ள சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.
நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை இரண்டு ஆண்டில் அதாவது 2020ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்று காரணத்தால் பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் வரை மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் அதிகாரிகள் இந்த சாலையை கண்டுகொள்ளாமல் விட்டதால் வடலூர் பகுதியில் இருந்து கோலியனூர் வரை பல்வேறு இடங்களில் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது.
மேலும் சாலை வழியாக மணல் லாரிகள், கனரக வாகனங்கள் செல்வதால் மிகவும் சேதம் அடைந்து சாலையின் நடுவே மிகவும் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். பள்ளத்தில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளால் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய பயணிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் பஞ்சராகியும், பழுதாகியும் வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும்முன் சாலையை சீரமைக்கவும், சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் சாலையை சீரமைக்க தொடர் போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து வடலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பெலிக்ஸ் கூறுகையில், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்விளக்கு வசதி இல்லாமல் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் இருக்கும் பள்ளம், மேடு தெரியாமல் தினந்தோறும் சாலையில் விபத்துகள் ஏற்படுகிறது.
ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இச்சாலை விரிவாக்க பணியால் பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்களும் தூர்ந்து போய் காணப்படுகிறது. சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுவதால் உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, ஆண்டிமடம் வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் சுற்றி செல்வதால் அதிக நேரம் ஆவதோடு மிகுந்த சிரமமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது, என்றார்.