தமிழக மீனவ மக்கள் சந்திக்கும் இன்னல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க விஜய்வசந்த் எம்பி வலியுறுத்தல்
சென்னை: கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியினை மத்திய அரசு குறைத்த காரணத்தால் ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறிப்பாக, மீனவர் நலன் சார்ந்த திட்டங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றன. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் மூலம் மீனவர்களுக்கு ஆதரவு கிடைக்காமல் உள்ளது. இதனால் நிதிஉதவி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படாமல் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் இறங்கு தளங்கள் செப்பனிடப்பட்டு சீர்செய்யப்படாமல் உள்ளது. மீன்வளத்தையும், மீனவ கிராமங்களையும் பாதுகாக்க காலநிலையை தாங்கும் கரையோர மீனவ கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைக்கப்பட்ட திட்டம் செயலிழந்து காணப்படுகிறது. மீனவ மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மீனவ கிராமங்களின் பாதுகாப்பு மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாராளுமன்றத்தில் விவாதம் தேவை என ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.


