திருமலை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் பாதிப்பில் இதுவரை 17 பேர் இறந்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவலை ஓரிருநாளில் அறிவிக்க உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. விஜயவாடாவில் கடந்த 3 நாட்களாக தங்கி முதல்வர் சந்திரபாபு நாயுடு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அவ்வப்போது பொக்லைன் இயந்திரத்தில் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதோடு பொதுமக்களை சந்தித்து வருகிறார். இதேபோல் நேற்று நள்ளிரவு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : கிருஷ்ணா நதியில் 11 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேறிய நிலையில் தற்போது 8 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது.
இன்னும் படிப்படியாக குறைந்துவிடும். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடியாத இடங்களில் ட்ரோன் மூலம் உணவு, குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நாளை (இன்று) முதல் கூடுதலாக 70 ட்ரோன்களில் குடிநீர், உணவு சப்ளை செய்யப்படும். மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். 25 கிலோமீட்டர் தூரத்திற்கு பொக்லைன் வாகனம் மூலம் பயணித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டேன். அவர்களது குறைகளை கேட்டறிந்தேன். பொக்லைனில் செல்வதை தவிர்த்து ஹெலிகாப்டரில் சென்றிருக்கலாமே என சிலர் கேட்டனர். ஆனால் உயரத்தில் இருந்து பார்ப்பதற்கு எங்கும் வெள்ளக்காடாக மட்டுமே ெதரியுமே தவிர, அங்கு மக்கள் படும் இன்னல்கள் தெரியாது. இதனால்தான் பொக்லைனில் பயணிக்கிறேன். ெதாற்றுநோய் பரவாமல் தடுக்க தூய்மைபணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீடாக சென்று தீயணைப்புத்துறையினர் அங்குள்ள சேறும், சகதியை வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் தூய்மை படுத்த உத்தரவிட்டுள்ளேன். வெள்ளத்தில் எங்காவது சடலங்கள் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கியிருந்தால் உடனடியாக அவற்றை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன். இதேபோல் கால்நடைகள் இறந்திருந்தால் அவற்றை மீட்டு அடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன். பல இடங்களில் பிஸ்கெட், உணவு பொருள் ஆகியவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு கையில் கொடுப்பதை தவிர்த்து தூக்கிவீசியபடி கொடுப்பதால் அவை தண்ணீரில் விழுந்து நாசமடைகிறது. எனவே மனிதாபினமானத்துடன் அவர்களது கைகளில் சேர்க்க தெரிவித்துள்ளேன். 1000 குடும்பத்திற்கு 1 அதிகாரி என நியமிக்கப்பட்டு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அந்த அதிகாரியை தொடர்புகொள்ள செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் சேதம், வாகன சேதம் ஆகியவை குறித்து கணக்கிடும் பணி நடக்கிறது. வாகனங்களில் உள்ள சேற்றை தூய்மை படுத்தவும் தீயணைப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
வெள்ளத்தில் சிக்கி சேதமான வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பணத்தை அடுத்த 15 நாட்களுக்குள் வழங்கவும், அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். 4 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால் வைரஸ் காய்ச்சல் அதிகரிக்கும் என்பதால் தூய்மை பணிகளை முடுக்கிவிட்டுள்ளேன். வெள்ளம் பாதிப்புகளை துல்லியமாக கண்காணித்து வருகிறோம். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் வளர்ச்சிப்பணிகள் செய்யாததால் இதுபோன்ற மோசமான சம்பவம் அரங்கேறியது. மாநில வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் வென்டிலேட்டரில் வைத்ததால் இன்று இதுபோன்று நடந்துள்ளது. உடனடியாக என்ன செய்வது என புரியாத சூழலில் உள்ளேன். 40 ஆண்டுகால எனது அரசியல் வாழ்வில் இதுபோன்ற மோசமான அரசியல் கட்சியை (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) நான் பார்த்ததே இல்லை. இவ்வாறு கூறினார். இந்நிலையில் தொடர்ந்து 4வது நாளாக உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை சந்திரபாபுநாயுடு பார்வையிட்டு வருகிறார்.