திருமலை : விஜயவாடா கோட்டத்தில் டிக்கெட் சரிபாப்பு பணியின்போது ஒரே நாளில் ₹24.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் 3,484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தெற்கு மத்திய ரயில்வே விஜயவாடா கோட்டத்தில் மெகா டிக்கெட் சரிபார்ப்பு பணி சீனியர் வணிக கோட்ட மேலாளர் ராம்பாபு மேற்பார்வையில் சுமார் 135 டிக்கெட் பரிசோதகர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டிக்கெட் இல்லாமல் முறையற்ற பயணம் செய்ததற்காக 3,484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
ஒரேநாளில் ₹24.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக விஜயவாடா கோட்டத்தின் அனைத்து பிரிவுகளிலும் குழுக்கள் அமைத்து மொத்தம் 48 ரயில்கள் சோதனை செய்யப்பட்டன.
இந்த சோதனையில் டிக்கெட் பரிசோதகர்கள், ஸ்டேஷன் ஊழியர்கள் மற்றும் புதிதாக பணியமர்த்தப்பட்ட ப்ரோ-கமர்ஷியல் கிளார்க்குகள், டிக்கெட் கலெக்டர் ஆகியோர் பங்கேற்றனர். காலை மற்றும் மதியம் என்று இரு வேளைகளில் 12 மணிநேரம் தொடர் சோதனை நடத்தினர். மொத்தம் 86 டிக்கெட் சரிபார்க்கும் பணியாளர்கள் மற்றும் 10 ஆர்பிஎப் போலீசார் பங்கேற்றனர். விஜயவாடா ரயில் நிலையத்தில் மட்டும் 1,294 வழக்குகள் பதிவு செய்து ₹8.68 லட்சம் வசூலிக்கப்பட்டது.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக 1,641 வழக்குகள், ஒழுங்கற்ற பயணம் தொடர்பாக 1,825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ₹15.41 லட்சம் மற்றும் ₹9.10 லட்சம் அபராதம் டிக்கெட் சோதனை ஊழியர்களால் பெறப்பட்டது. மெகா டிக்கெட் சரிபார்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து ஒரேநாளில் அதிக அபராதத்தை வசூல் செய்ததற்காக டிக்கெட் சரிபார்ப்பு பணியாளர்களை விஜயவாடா கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளர் நரேந்திர பாட்டீல் பாராட்டினார்.