விஜயவாடா: விஜயவாடாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை 2-வது நாளாக முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். விஜயவாடாவில் 2 நாட்களாக பெய்த கனமழையால் தென் கடலோர ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் நள்ளிரவு முதல் பிற்பகல் 3 மணிவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை படகு மூலம் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், 200 ஆண்டுகள் இல்லாத கனமழை பொழிந்துள்ளது. கனமழை வெள்ளத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மாநில அரசு மழை பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அனைத்து வகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. மீட்புப் பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் 1,11,259 அளவிலான வேளாண் பயிர்களும், 7,360 அளவிலான தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. ஆந்திர மாநிலம் முழுவதும் நேற்றையதினம் (செப்.1) 28.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. விஜயவாடா வெள்ளக் காடான மாநிலமாக மாறியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா கனமழை காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்தனர்.
மழை வெள்ளம் காரணமாக விஜயவாடா – காசிபேட் இடையே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெலங்கானாவில் இன்றும் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் இன்று ஆந்திர மாநிலம் முழுவதும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதற்கிடையில் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி மழை, வெள்ள பாதிப்புகளை கேட்டதோடு ஒன்றிய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று தொலைபேசியில் தெரிவித்தார்.