*திருப்பதி கலெக்டர், ஆணையாளர் பங்கேற்பு
திருப்பதி : விஜயவாடாவில் இருந்து 2024ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி காணாலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இதில், திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் வெங்கட ரமணா, ஆணையாளர் ஹரிதா கலந்து கொண்டனர்.ஆந்திர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா மாநிலத்தில் 2024ம் ஆண்டுக்கான பெயர் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், வீடு வீடாகச் சரிபார்த்தல், வாக்காளர் அட்டை அச்சடித்தல் மற்றும் விநியோகம் குறித்த பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் டிஇஓக்களுடன் விஜயவாடாவில் இருந்து ஆய்வு செய்தார். இதில், திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் வெங்கட ரமணா, மாநகராட்சி ஆணையாளர் ஹரிதா, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில், நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வீடு வீடாகச் சரிபார்த்து வரும் பணிகள் குறித்து மாவட்டம் வாரியாக ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார். அரசியல் கட்சிகள் கூட்டத்தில் கூறப்பட்ட பிரச்னைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிலுவையில் இல்லாமல் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்றார். மேலும், மாநில அளவில் மேலாண்மைப் பயிலரங்கம் இம்மாதம் 16ம் தேதி நடைபெறும் என்றும், மாவட்ட ஆட்சியர்களுடன் மூத்த மேற்பார்வை அதிகாரியும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
அதற்கு விளக்கம் அளித்த திருப்பதி கலெக்டர் வெங்கட ரமணா, ‘மாநில தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளின்படி மாவட்டத்தில் திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தார். மேலும், வாக்காளர் அட்டை அச்சடித்து வழங்குவது வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருவதாகவும், 15 நாட்களுக்கு ஒருமுறை கார்டுகள் அச்சடித்து விநியோகம் செய்யப்படும்’ என்று கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பென்சல் கிஷோர், இஆர்ஓக்கள் கனக நரசா, கோதண்ட ராமி, கிரண்குமார், சந்திரமுனி, சீனிவாசலு, தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் சுரேஷ், பணியாளர்கள் பவன், ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.