காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 22ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, கடந்த 21ம்தேதி இரவு சேனை முதன்மையார் புறப்பாடு நடைபெற்றது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் விளங்குகிறது.
கொடியேற்றத்தை தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள் சிம்ம வாகனம், கருட சேவை, சேஷ வாகனம், நாச்சியார் திருக்கோலம், சந்திரபிரபை, யாளி வாகனங்களில் வீதி உலா வந்து அருள் பாலித்து வருகிறார். 3ம் நாளான நேற்று காலை விஜயராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 28ம்தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.