திருப்பூர்: விஜயலட்சுமி அளித்த புகாரில் தன் மீது நடவடிக்கை எடுத்து பாருங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். சீமானை கைது செய்யும் வரை தனது போராட்டம் தொடரும் என்றும் விஜயலட்சுமி கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். சீமான் மீதான புகார் குறித்து விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் திருப்பூரில் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுகிறது. விசாரித்து என் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கட்டும். குற்றச்சாட்டுகளை கண்டு நான் அஞ்சவில்லை; எங்கும் ஓடி ஒளியவில்லை என்றார். விஜயலட்சுமி புகாரில் என் மீது என்ன நடவடிக்கை எடுத்துவிட முடியும் என கேள்வி எழுப்பிய சீமான், விஜயலட்சுமி புகார் மீது முடிந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என சவால் விடுத்தார். மேலும் அவசியமான கேள்விகளை மட்டும் என்னிடம் கேளுங்கள் என கூறினார். இறுதியாக அந்த பயம் இருக்கட்டும் என செய்தியாளர் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் மக்களுக்கு என்ன பயன் எனவும் கேள்வி எழுப்பினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடந்தால் என்ன மாற்றம் நடந்துவிடும்? ஒரு பிரதமர் பதவியை இழந்தால், ஒட்டுமொத்த தேசத்திற்கும் தேர்தலா? ஒரு மாநில ஆட்சி கலைக்கப்பட்டால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேர்தலா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். குரங்கு கையில் பூமாலை போல ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால், தேர்தல் செலவு குறையும். இந்தியா ஒரே தேசமல்ல பல தேசங்களின் கூட்டணி எனவும் சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.