சென்னை: நடிகை விஜயலட்சுமியுடன் குடும்பம் நடத்தி 7 முறை கருச்சிதைவு செய்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, வளசரவாக்கம் போலீசார் 2வது முறையாக நேற்று காலை சீமானிடம் சம்மன் வழங்கினர். அதைதொடர்ந்து இயக்குநர் சீமான் வரும் 18ம் தேதி விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராகிறார். நடிகை விஜயலட்சுமி, இயக்குநர் சீமான் மீது கடந்த 28ம் தேதி மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதைதொடர்ந்து இயக்குநர் சீமானுக்கு வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விளக்கம் கேட்டு இயக்குநர் சீமான் நேரில் ஆஜராக கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். அப்போது வழக்கு ஒன்றில் ஆஜராக உள்ளதால் கடந்த 12ம் தேதி நேரில் ஆஜராகுவதாக சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் அதன்படி சீமான் அன்று வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இதுகுறித்து போலீசார் சட்ட நிபுணர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.அந்த ஆலோசனையை தொடர்ந்து, வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கடைசி வாய்ப்பாக மீண்டும் 2வது முறையாக இயக்குநர் சீமான் இன்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று, சிறப்பு உதவி ஆய்வாளர் கோபி என்பவர் நேற்று காலை 9.30 மணிக்கு நீலாங்கரை சந்தீப் அவென்யூ பகுதியில் வசித்து வரும் இயக்குநர் சீமான் வீட்டில், அவரிடம் சம்மன் வழங்கினார்.
அந்த சம்மனை சீமான் தரப்பு பெற்றுகொண்டனர். பிறகு ஏற்கனவே திட்டமிட்ட கட்சி பணிகள் இருப்பதால் நாளை நேரில் ஆஜராக முடியாது என்றும், எனவே, வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராவதாக சீமான் தரப்பில் சம்மன் வழங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் கோபியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2வது சம்மனுக்கு நேரில் ஆஜராகவில்ைல என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக இயக்குநர் சீமானை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் போலீசார் இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்க சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேநேரம், இயக்குநர் சீமான் நேரில் ஆஜராகும் பட்சத்தில், அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்த பட்டியலை தயார் நிலையில் வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.