சென்னை: விளை நிலங்களை அழித்து வரும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து தேமுதிக சார்பில் வருகிற 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடகா அரசு திறக்க கோரியும், விளை நிலங்களை அழித்து வரும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும் தேமுதிக சார்பில் வருகிற 10ம் தேதி காலை 10 மணி அளவில் ஒருங்கிணைந்த மாவட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவைத்தலைவர் டாக்டர் வி.இளங்கோவன், கள்ளக்குறிச்சியில் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், தஞ்சாவூர் மாவட்டத்தில் துணை செயலாளர் ப.பார்த்தசாரதி, சென்னை மாவட்டத்தில் வி.விஜயபிரபாகரன் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர் பெயர் விவரங்களையும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.