சென்னை: தேமுதிக தலைமை அலுவலகத்தில், தனது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். நேற்று காலையிலிருந்து தேமுதிக தலைமை கழக அலுவலகத்தில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. திரை பிரபலங்களும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வழக்கமாக தொண்டர்களுடன் பிறந்தநாள் கொண்டாடுவது விஜயகாந்த்தின் வழக்கம். அரசியலுக்கு வந்தபிறகு தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்த் கொண்டாடி வருகிறார். இந்த நாளில் கூடுதல் நலத்திட்ட உதவி வழங்குவது விஜயகாந்த்தின் பழக்கம்.
இதனால், தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்தை நேரில் சந்திக்க காலையிலேயே கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். தொண்டர்களின் வாழ்த்துகளை கேட்டு உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கிய அவர், கைகளை கூப்பி தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ‘‘நாடாளுமன்ற கூட்டணி குறித்து பேச நேரம் நிறைய உள்ளது. யாருடன் கூட்டணி என்று கேப்டன் உரிய நேரத்தில் அறிவிப்பார். விரைவில் சென்னையில் பொதுக்குழு நடக்க உள்ளது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும். அதை முதலில் தேமுதிக வரவேற்கும்’’ என்றார். அரசியல் தலைவர்கள் வாழ்த்து: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்), ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்), டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்), கமல் (மநீம தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தேமுதிக நிறுவன தலைவரும் எனது தோழருமான விஜயகாந்த்துக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.