சென்னை: சாயக்கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் சில தொழிற்சாலைகள் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி கழிவுநீர் நேரடியாக வெளியேற்றுவதாக தெரிகிறது. இதனால், பெருந்துறை சிப்காட்டை சுற்றியுள்ள குளம், குட்டைகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மாசு அடைந்து மக்கள் அந்த நீரை பயன்படுத்தும் போது புற்றுநோய் போன்ற பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சாயக்கழிவு நீரால் அங்கு விவசாயமும் கேள்விக்குறியாகியுள்ளது. சாயக்கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பதோடு, ஆலை உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படும்.