சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் காங்கிரசின் கட்டமைப்பை வலுப்படுத்த வரும் 5ம் தேதி முதல் கிராம கமிட்டிகள் சீரமைப்பு பணிகள் தொடங்குகிறது. இந்த பணிகள் டிசம்பர் 15ம் தேதிக்குள் முடிவையும். அதைத் தொடர்ந்து கிராம தரிசனம் என்ற பெயரில் கிராமங்கள் நோக்கி செல்கிறோம்.
விஜய்யின் அரசியல் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்தியா கூட்டணி மேலும் வலுப்பெறவே விஜய்யின் அரசியல் பிரவேசம் உதவும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, அருள் பெத்தையா, பி.வி.தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.