சேலம்: சேலம் அருகே கல்குவாரி உரிமையாளரை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி டிஎஸ்பியாக சூரியமூர்த்தி, கடந்த 2017 முதல் 2020 வரை பணியாற்றினார். தற்போது இவர் விருதுநகர் மாவட்ட போலீசில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பியாக உள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி சரகத்திற்கு உட்பட காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக லட்சுமணன் கடந்த 2020 முதல் 2021 வரை பணியாற்றினார். தற்போது இவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக உள்ளார்.
இவர்கள் பொறுப்பு வகித்த காலத்தில் பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் நடத்தி வரும் கல்குவாரியில், அனுமதியின்றி 121 ஜெலட்டின், 139 டெட்டனெட்டர்கள் வைத்திருந்ததாக, டிஎஸ்பியின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யாமல் இருக்க டிஎஸ்பி ₹50 ஆயிரமும், இன்ஸ்பெக்டர் ₹30 ஆயிரமும் லஞ்சமாக பெற்றதாக தெரிகிறது.
இதுகுறித்து விஜயகுமாரின் சகோதரர் ராஜ்குமார் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர், போலீஸ் டிஜிபி, அரசுக்கு புகார் அளித்தார். இது தொடர்பாக சேலம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். இதையடுத்து சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில், விருதுநகர் ஏடிஎஸ்பி, நாமக்கல் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆகியோர் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.