திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சந்தைமேடு பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் சார் பதிவாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் பத்திரம் பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சம் வழங்குவதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 3.30 திருவண்ணாமலை விஜிலென்ஸ் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களை கண்டவுடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்கள் கையில் வைத்திருந்த கட்டுக்கட்டான பணம், நகை மற்றும் பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு ஆகியவையை ஜன்னல் வழியாக வீசி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது வெளியில் வீசப்பட்ட பணம் உட்பட கணக்கில் வராத ரூ.2.5 லட்சம் மற்றும் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மற்றும் பணத்தை வெளியில் வீசிய சுரேஷ் என்பவரிடம் செல்போன்கள் பறிமுதல் செய்து 2 மணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.