புதுடெல்லி: ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகனை, வியட்நாம் கம்யூனிஸ்ட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடர்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவர் நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு டெல்லியில் நேற்று சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, ஊடகம், பொழுதுபோக்கு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் வியட்நாமும் ஒப்புக்கொண்டன. மும்பையில் கடந்த மே மாதம் நடந்த உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் வியட்நாம் தூதுக்குழு பங்கேற்றதை இணையமைச்சர் எல்.முருகன் பாராட்டினார்.
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியாவின் வளர்ச்சியை நுயென் ட்ராங் நிகியா பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்பையும் ஒத்துழைப்பையும் அவர் எடுத்துரைத்தார். இரு நாடுகளின் ஊடக அமைப்புகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்கான திட்டங்களை உருவாக்க இந்த சந்திப்பின் போது ஒப்புக்கொள்ளப்பட்டது. பவுத்த பாரம்பரியம் உட்பட இரு நாடுகளும் தங்கள் ஆழமான கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்தவும், பல பரிமாண ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் தீவிரமாக பணியாற்றுவது என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் ஜாஜு கலந்து கொண்டார்.