வங்காள விரிகுடா பகுதியை ஒட்டி உள்ள சிறப்பு மிக்க மாநிலம், ஒரிசா. அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? ஒரிசா மாநிலத்தில், பூரி என்னும் இடத்தில்தான் உலக பிரசித்தி பெற்ற “ஜெகந்நாதர் கோயில்’’ உள்ளது. இங்கு வருடம் 365 நாட்களும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். நம்மூர் கோயில்களில் உள்ளது போல் சிலை இங்கு கிடையாது. மாறாக, திருமேனிகள் மரத்தால் ஆனவை. முகம் மற்றும் கைகள் மட்டுமே காணப்படும். சற்று வித்தியாசதோற்றம் கொண்ட கோயில். இங்கு மூலவர் ஜெகந்நாதர் ஆவர்.
மாற்றப்படும் திருமேனிகள்
இவருடன் பலபத்திரர் (பலராமர்) மற்றும் சுபத்திரையின் திருமேனிகளும் உள்ளன, அவைகளும் மரத்தால் ஆனவையே. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மரத்தால் ஆன மூலத் திருமேனிகளை முறைப்படி பூஜைகளை செய்து புதிய மரத்தால் செதுக்கி மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படும். ஆச்சரியமாக இருக்கிறதா! இன்னும் இருக்கிறது. பூரி ஜெகந்நாதர் கோயிலின் தேரோட்டமானது உலக புகழ்வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இத்திருவிழா, ஆண்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலிருந்தும் கலந்து கொள்வார்கள். 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான ஜெகந்நாதரும், 14 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும், 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்புநிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர்.
சுத்தம் செய்யும் மன்னர்
இந்த தேர் விழாவில், முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர் ஆகியவை புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகந்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும். தேரோடும் வீதியான ரத்ன வீதியை, தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். இது தொன்றுதொட்டு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்திற்காக, ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர், மரத்தால் செய்யப்படுகிறது. பூரி கோயில் அருகேயே உள்ள குண்டிச்சா என்னும் கோயிலை நோக்கிச் செல்லும் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோயிலில் ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு, பூரி ஜெகந்நாதர் கோயிலை வந்தடையும்.
பானையில் பிரசாதம்
பூரி ஜெகந்நாதர் கோயிலின் பிரசாதம், “மகாபிரசாத்’’ என்று அழைக்கப்படுகிறது. தினமும் 50 குவிண்டால் அரிசி (ஒரு குவிண்டால் என்பது 100 கிலோவாகும்) 20 குவிண்டால் பருப்பு, 15 குவிண்டால் காய்கறிகள் சமைக்கப்படுகின்றன. மேலும், சமையலுக்கு கங்கை மற்றும் யமுனைகளில் இருந்து வரும் தண்ணீரை மட்டுமே பயன்
படுத்தப்படுகிறது.
சமைத்த பின், அதனை பானைப் பானையாக இருவர் தூக்கிச் சென்று ஜெகந்நாதருக்கு நிவேதிக்கிறார்கள். நிவேதித்த உணவினை பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். விநியோகம் செய்த பின், பானையை உடைத்துவிடுகிறார்கள். இது போல, இன்னும் பல அதிசயங்கள் நிறைந்த பூரி ஜெகந்நாதருக்கும், மகத்துவம் நிறைந்த மத்வ மகான்கள் என்னும் இந்த பகுதிக்கும் என்ன தொடர்பு? என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம்.
பூரியில் பிருந்தாவனம்
பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கும், இந்த தொகுப்பில் காணவிருக்கும் மத்வ மகானான ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. ஆம்! ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரின் மூல பிருந்தாவனம், பூரியில்தான் இருக்கின்றன. எத்தகைய பெரும் சாந்நித்யம் நிறைந்த இடத்தில், ஒரு மத்வ மகானின் பிருந்தாவனம் இருப்பது, மேலும் சாந்நித்யத்திற்கு வலுசேர்க்கிறது. அத்தகைய மிக பெரிய மகான் ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இவரின் காலம், 1388 முதல் 1392 வரை. இவரின் பூர்வாஷ்ரம பெயர் கிருஷ்ண பட் என்றும், சிலர் நரசிம்ம சாஸ்திரி என்றும் கூறுகிறார்கள். ஸ்ரீ ஜெயதீர்த்தரின் நேரடி சீடர், வித்யாதிராஜ தீர்த்தர். ஒருமுறை, வட இந்தியாவில் சஞ்சாரத்தை மேற்கொள்ளும்போது, பீமாபூர் என்னும் இடத்திற்கு வந்தார். மேலும், கங்கை நதியில் நீராட, காசிக்குச் செல்ல நினைத்தார், வித்யாதிராஜ தீர்த்தர்.
கனவில் வந்த கங்கை
ஆனால், தனது சீடர்களுக்கும் துவைத மக்களுக்கும், துவைத சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்வதற்கே நேரம் சரியாக இருந்திருக்கிறது. திடீர் என்று ஒரு நாள், வித்யாதிராஜ தீர்த்தரின் கனவில் தோன்றிய கங்கை தேவி, “உனது சேவையை நான் மெச்சுகிறேன். நீ காசி வரை பயணிக்க வேண்டாம். நானே, இங்கு தோன்றுகிறேன்’’ என்று கூறினாள். அடுத்த நாள், பீமாபூரில் நதியாக கங்கா தேவி, பெருக்கெடுத்து ஓடத் தொடங்கினாள். அதுவே இன்று பீமாநதி என்று பெயர்கொண்டு பிரபலமாக உள்ளது. இதனைக் கண்டு ஆனந்தமடைந்தார், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர். உடனே.. கங்கா தேவிக்கு பூஜைகளை செய்து, தனது சீடர்களுடன் பீமா நதிக்கரையில் புனித நீராடினார். அன்று முதல் இந்தியா முழுவதிலும் உள்ள பல இடங்களுக்குச் சென்று துவைத வேதாந்தத்தை மேலும் பல இடங்களுக்குக் கொண்டு சேர்த்தார்.
இரண்டு பீடாதிபதிகள்
ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரின் காலத்தில்தான் மத்வ மடத்தின் கிளைகள் (மடங்கள்) பல உருவெடுக்க ஆரம்பித்தன. இப்படியாக காலங்கள் உருண்டோட, ஒரு நாள் திடீர் என்று ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அந்த சமயத்தில், அவருடைய சீடர்களில் ஒருவரான ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தருக்குப் பட்டம் கொடுத்து, தனக்கு பின் சமஸ்தான பூஜைகளை செய்யப்போவது இவர்தான் என அறிவித்தார். அதன்படி, ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் பூஜைகளையும், மடத்தையும் நிர்வகித்து வந்தார். இங்குதான் நாம் நம் பரமாத்மாவின் தெய்வீக விளையாடல்களை கவனிக்க வேண்டும். மிகவும் உடல் நலம் குன்றி இருந்த ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர், யாரும் எதிர்பார்க்காத வகையில் குணமடைந்துவிட்டார்.
ஆகையால், மீண்டும் மடத்தை நிர்வகிக்கும் பொறுப்பினை, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரே கவனிக்க தொடங்கினார். எனவே,ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர், துவைத தத்துவத்தைப் பரப்புவதற்காக சஞ்சாரம் மேற்கொண்டார். பரமாத்மாவின் தெய்வீக விளையாடல் நிற்கவில்லை. சிறிது நாட்களில், மீண்டும் ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர் நோய்வாய்ப்பட்டார். “தனக்கு பிருந்தாவன பிரவேஷம் காலம் வந்துவிட்டது. உடனடியாக, ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரை அழைத்து வாருங்கள்’’ என்று தன் சீடர்களுக்கு உத்தரவிட்டார், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர்.
இப்போது உள்ளது போல், அப்போதெல்லாம் தொலைத் தொடர்பு கிடையாது. திக்கு திக்குக்கு பண்டிதர்கள், சீடர்கள் என ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரை தேடத் தொடங்கினார்கள். பல நாட்கள் கடந்தும், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், செய்வது அறியாது தவித்தனர். வேறு வழியின்றி, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரின் மற்றொரு சீடரான ஸ்ரீ கவீந்திர தீர்த்தரை, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரின் அடுத்த பீடாதிபதியாக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகையால், ஸ்ரீ கவீந்திர தீர்த்தருக்கு பட்டம் கொடுத்து, முழு சமஸ்தானத்தையும் ஒப்படைத்தார், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர்.
மகான்களுக்கே தெரிந்த உண்மை
ஆக, வித்யாதிராஜ தீர்த்தருக்கு பின்னர்தான் எண்ணற்ற பல மடங்கள் உருவானது. அதாவது, ஸ்ரீ மத்வாச்சாரியார் அஷ்ட மடங்களை (8 மடங்களை) நிறுவினார். அதன் பின்னர் வந்த ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவ தீர்த்தர், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், ஸ்ரீ ஜெய தீர்த்தர், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர் வரையில், அஷ்ட மடங்கள் மட்டுமே இருந்தன. ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தருக்கு அடுத்த படியாக இரண்டு மடாதிபதிகள் உருவான காரணத்தினால், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் “வியாசராஜ மடம்’’ என்னும் புதிய மடத்தை நிர்ணயித்தார். அதேபோல், ஸ்ரீ கவீந்திர தீர்த்தர், “ராகவேந்திர மடம்’’ என்னும் புதிய மடத்தை நிர்ணயித்தார். (இந்த மடத்தின் பெயர்கள் சற்று குழப்பம் வரலாம்.
மகான் ஸ்ரீ வியாசராஜர் வந்த பின்னர்தான் வியாசராஜ மடம் வந்தது என்றும், மகான் ஸ்ரீ ராகவேந்திரர் வந்த பின்னர்தான் ராகவேந்திர மடம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இவர்களுக்கு முன்பாகவே இந்த இரண்டு மடங்களும் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் உண்மை என்னவென்று மகான்களுக்கு மட்டுமே தெரியும்). மகான் ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரைத்தியானித்தால், விசேஷ வித்யா அதாவது கல்விஞானத்தை அருள்வதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இவரின் மூல பிருந்தாவனம், ஒரிசா மாநிலம் பூரியில் இருக்கிறது. அடுத்த இதழில்… ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரைப் பற்றிப் பார்ப்போம்…
(மத்வ மகானின் பயணம் தொடரும்…)
ரா.ரெங்கராஜன்