பொன்னேரி: கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில் சென்னை வெளிவட்ட சாலை மற்றும் சென்னை எல்லை சாலை பணிகளுக்காக செம்மண் குவாரிக்கு அண்மையில் கனிமவளத்துறை அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொன்னேரியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்திட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். நடந்த ஆர்பாட்டத்திற்கு பொன்னேரி நகரச் செயலாளர் மதன் தலைமை வகித்தார். பொன்னேரி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் அபுபக்கர் வரவேற்புரையாற்றினார். கும்மிடிப்பூண்டி நேசகுமார், கடப்பாக்கம் வாசு, கயடை அறிவுச்செல்வன், இனியன், பஞ்சா, மாநெல்லூர் சம்பத், சுண்முகமணி, ஆரணி சேட்டு, மதன், ராம்கி, தேவம்பட்டு கண்ணதாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குநர் கோபிநயினார், மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், வழக்கறிஞர்கள் நெடுஞ்செழியன், அமரகவி, வெங்கல் கோ நீலன், திராவிட மணி, ஆவடி ராமதாஸ், மீஞ்சூர் சிவராஜ், சேகர், பொன்னேரி ஜெயபிரகாஷ், மேலூர் திருவடி, தென்னரசு, கவிஞர் ஜீவா பாபு உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். பொன்னேரி நகர நிர்வாகிகள் ஜெகதீசன், அப்துர்ரஹிம், ஜோசப், கார்த்திக் உள்ளிட்டோர் ஆர்பாட்டத்தை ஒருங்கிணைத்தனர். பொன்னேரி நகர பொருளாளர் வினோத் நன்றி கூறினார்.