திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவிக்கு செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பியவரை காயங்குளம் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அரிதா பாபு. இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவியாக உள்ளார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அவரது செல்போனுக்கு தொடர்ந்து வீடியோ காலில் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர் ஆபாசமாக பேசி வந்துள்ளார். அதன் பிறகு அவர் ஆபாச வீடியோக்களையும் அனுப்பினார். இன்டர்நெட்டில் காலில் அழைப்பதால் அவர் எந்த நாட்டில் இருந்து பேசுகிறார் என்பதை முதலில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அரிதா பாபு காயங்குளம் போலீசில் புகார் செய்தார். மேலும் வெளிநாட்டில் உள்ள தனது நண்பர்களுக்கும் இந்த விவரத்தை தெரிவித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகம்மது ஷமீர் (35) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் கத்தார் நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக முகம்மது ஷமீரை அந்த நிறுவனம் வேலையில் இருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது.
இதனால் நேற்று முகம்மது ஷமீர் கேரளாவுக்கு திரும்பினார். இந்த தகவல் அறிந்ததும் காயங்குளம் போலீசார் மலப்புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர். அரிதா பாபு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காயங்குளம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.