சேலம் : பீகார் மாநிலம் பகௌத்சஹர்சா மாவட்டம் பௌகர் பக்கமுள்ள மைனாக கிராமத்தை சேர்ந்தவர் விசர்ஜித் காமத் (19). இவர் மற்றும் அதே ஊரை சேர்ந்த நண்பர்கள் 4 பேர் சேலம் அழகாபுரம் பெரியபுதூரில் இந்திராணி என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். இவர்கள் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்தனர்.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் விசர்ஜித்காமத் சேலம் வந்தார்.இவர், அவரது ஊரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்தார். ஊரில் இருக்கும் போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். இதனிடையே விசர்ஜித் காமத் சேலம் வந்த பின்னர் தனது காதலியுடன் தினமும் இரவு 12 மணி வரை வீடியோ காலில் பேசி வந்தார். அப்போது, சேலம் வரும்படி விசர்ஜித் காமத், காதலியை அழைத்துள்ளார்.
இதேபோல் நேற்று முன்தினமும் இருவரும் வீடியோ காலில் பேசியுள்ளனர். அப்போது விசர்ஜித் காமத், உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை. ரயில் ஏறி சேலம் வந்தால் உன்னை நல்லபடியாக பார்த்துக்கொள்வேன் என கூறி காதலியை அழைத் துள்ளார். ஆனால் காதலி, தனது பெற்றோரை விட்டு எப்படி வருவது என கூறி கண் கலங்கியுள்ளார்.
இதனால், கடந்த 4 மாதமாக காதலியை நேரில் பார்க்க முடியாத வேதனையில் இருந்து வந்த விசர்ஜித் காமத், நேற்றிரவு திடீரென சமையல் அறைக்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை நேற்று அதிகாலை அவருடன் தங்கியிருந்த நண்பர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசர்ஜித் காமத்தின் செல்போனை எடுத்து போலீசார் பார்த்தபோது, அதில் அவர் தனது காதலியுடன் எடுத்திருந்த செல்பி மற்றும் புகைப்படங்கள் அதிகளவில் இருந்தது. மேலும் விசர்ஜித் காமத் தனது காதலியுடன் வீடியோ காலில் பேசியபோது, அதில் தனது காதலி கண் கலங்குவதை ஸ்கிரீன் ஷாட்டும் எடுத்து வைத்திருப்பதும் தெரிந்தது. தொடர்ந்து இதுபற்றி இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.