லக்னோ: இந்த உலக கோப்பைத் தொடரில் இந்தியா முதலில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் இரண்டவதாக பேட்டிங் செய்துதான் வென்று இருந்தது. அப்படி ஆஸியை 6 விக்கெட், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட், பாக், வங்கத்தை தலா 7விக்கெட், நியூசியை4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் லக்னோவில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங் செய்ய வைத்தது. அது பலருக்கும் ‘திக்.. திக்…’யை ஏற்படுத்தியது அதற்கேற்ப இந்தியா தட்டுதடுமாறி 9 விக்கெட்களை இழந்து 229ரன்தான் எடுத்தது. அந்த இலக்கை எளிதில் விரட்டிப் பிடிக்கலாம் என்ற இங்கிலாந்தின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தாலும் 100ரன் வித்தியாசத்தில் 6வது வெற்றியை பெற்றது. இந்த 100ரன்னில் 87ரன்னை ஆட்டநாயகனான கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே விளாசினார். வெற்றிக்கு பிறகு பேசிய ரோகித், ‘எங்களின் பல்வேறு திறமைகளை வெளிக் கொண்டு வந் ஆட்டம் இது. தேவைப்பட்ட நேரத்தில் எங்களின் அனுபவ வீரர்கள் தங்கள் தேர்ந்த அனுபவங்களை வெளிப்படுத்தியது வெற்றிக்கு உதவியாக இருந்தது.
முதல் 5 ஆட்டங்களில் 2வதாக பேட்டிங் செய்த நாங்கள் இதில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டி இருந்தது. நல்ல எண்ணிக்கையை எட்ட நினைத்தோம். ஆனால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. முதல் 10ஓவருக்குள் 3 விக்கெட்களை இழந்தது சிறப்பனதல்ல. அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் தட்டுதடுமாறி 200ரன்னை கடந்திருந்தாலும் இன்னும் ஒரு 30ரன்னை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் பந்து வீச்சின் போது எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் நிலைமைகளை சரியாக புரிந்துக் கொண்டனர். களத்தில் பந்து அசைந்தும், பக்கவாட்டில் பறந்தததையும் மிகச் சரியாக பயன்படுத்தினர். இரண்டு சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் அனுபவத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தினர். எனினும் நம்மிடம் சிறந்த பந்து வீச்சு வரிசை இருந்தாலும் பேட்ஸ்மேன்களும் ஏதாவது செய்வது அவசியம் ’என்றார்.