எல்லோரும் ஏதேனும் புதிய விஷயங்களைச் செய்கிறபோது அதிகம் பதற்றப்படுகின்றோம், பயப்படுகின்றோம்.ஆனால் மேல்நாட்டவர்கள் அப்படி அல்ல, நீங்கள் ஒலிம்பிக் போட்டியில் விளையாட செல்வதற்கு முன்பு பேட்டி கொடுக்கிற வீரர்களை பாருங்கள். அவர்களை விடவா நாம் பதற்றத்தில் இருந்துவிடப்போகிறோம்?அவர்கள் சொல்வது என்ன தெரியுமா நான் உற்சாகமாக இருக்கிறேன் என்பதுதான்.ஒரு டம்ளரில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறது இதை நெகட்டிவாகச் சிந்திப்பவர்கள் எப்படி சொல்வார்கள் என்றால், மீதி பாதி தண்ணீர் என்னவாயிற்று யார் குடித்திருப்பார்கள்? என்றெல்லாம் எதிர்மறையாக சிந்திப்பார்கள். பாசிட்டிவாகச் சிந்திப்பவர்கள், ‘‘அட பாதி டம்ளர் தண்ணீர் இருக்கிறது. தற்போதைக்கு நம் தாகத்திற்கு இது போதும் என்று நேர்மறையாக சிந்திப்பார்கள். இந்த வித்தியாசம் தான் பயத்திற்கும், உற்சாகத்திற்கும் உள்ள வேறுபாடு.உற்சாகமான மனநிலையில் மூளை நன்றாக சிந்திக்கும். வெற்றியை பெரு வெற்றி யாக மாற்றி தரும். பயம் மூளையின் செயல்பாட்டை சீரழிக்கும்.இயல்பாக கிடைக்கும் வெற்றியைக்கூட இழுபறியாக மாற்றிவிடும். எதற்கு வீண் பயம், தேவையற்ற டென்ஷன். இவை இதயத்துடிப்பு அதிகரித்து உடல் உபாதைகளுக்கு வழி வகுத்து விடும்.உண்மையான உற்சாகம் உடலைச் சீராக்கும். பயத்தோடு இருக்கிறபோது நல்ல உத்திகள் நம் மனதில் உடனடியாக தோன்றாமல் போகக் கூடும். உற்சாகமாக இருக்கிறபோது மனதில் இறுக்கம் குறையும், முகத்தில் புன்னகை ஏற்படும். புதிய சிந்தனைகள் பிறக்கும். வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதற்கு உதாரணமாக இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.
ஜூலிமா தேகா தனது சிறுவயதில் எவரெஸ்ட் சிகரத்தை பற்றிய புத்தகம் ஒன்றைப் பரிசாகப் பெற்றார். அந்த புத்தகத்தை படித்துப் பார்த்தார். ஏனோ அவருக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷம்.தன்னுடைய வருங்காலத்தைப் பார்ப்பது போன்ற உணர்வே அவருக்கு ஏற்பட்டது.டென்சின் நார்கே, எட்மர்ட் ஹிலாரி போன்றோரின் கதைகள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. இவர்களை போன்றே சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஜூலிமாவின் பெற்றோருக்கு ஐந்து பெண் குழந்தைகள்.ஜூலிமா இரண்டாவது மகள். ஜூலிமா அசாமில் பிறந்து வளர்ந்தவர். பாரம்பரிய கிராமச் சூழலில் வளர்ந்தார். மலையேற்றம் என்பது இவரது கனவு. ஆனால், அப்படிப்பட்ட கிராமத்தில் இருந்துகொண்டு இது சாத்தியமா என்ன? சத்தியமானது அவருடைய பெற்றோர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள்.ஜூலிமாவின் அப்பா கிரீந்திரநாத் தேகா ராணுவ வீரர். பெண் குழந்தைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற வரையறை பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால் இவரது கருத்து முற்றிலும் மாறுபட்டது. ஜூலிமாவின் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தைகள் இல்லை. எல்லாமே பெண் குழந்தைகள். ஆனால் ஆண் குழந்தையை எப்படியெல்லாம் வளர்ப்பார்களோ அப்படித்தான் அவரை வளர்த்தார்கள்.
ஜூலிமாவிற்கு சாகசங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.இதை இவரது அப்பாவும் அறிந்திருந்தார். எனவே ஜூலிமாவிற்கு தன்னுடைய ராஜ்தூத் பைக்கை ஓட்டக் கற்றுக்கொடுத்தார். தனது கிராமத்தைச் சுற்றியிருந்த மலையடிவாரப் பகுதிகளை பைக்கில் சுற்றி வரும்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல் இருக்கும் என்கிறார் ஜூலிமா.கிராமத்து மக்கள் என்னைப் பற்றி கிசுகிசுப்பார்கள். ஊரைச் சுற்றக்கூடாது.இதை ஊக்குவிக்கவேண்டாம் என என் பெற்றோரிடம் குறை கூறினார்கள். ஆனால் என் அப்பா யாருடைய வார்த்தைகளையும் காது கொடுத்துக் கேட்கவில்லை என்கிறார் ஜூலிமா.ஜூலிமா பத்தாம் வகுப்பு படித்து முடித்தார். 16 வயதிலேயே திருமணம் முடிந்தது. கனவுகளை மூட்டை கட்டி வைத்துவிடவேண்டுமே என வருந்தினார். உடனே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு படிப்பைத் தொடர்ந்தார். 2011-ம் ஆண்டு சோஷியலாஜி பிரிவில் பட்டம் வாங்கினார்.ஆனால் திருமண உறவில் சிக்கல்கள் எழுந்தன. கணவரை விட்டுப் பிரிந்து தாய்வீட்டிற்கே திரும்பினார். குழந்தைகளை தனியாக கஷ்டப்பட்டு வளர்த்தார். இவரது நெருங்கிய நண்பரும் வணிக பார்டனருமான பூர்ணா சாகச விளையாட்டு நிறுவனம் நடத்தி வந்தார். அதில் வந்து வேலை செய்யுமாறு ஜூலிமாவிடம் கேட்டுக்கொண்டார். இந்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தலாம் என முடிவு செய்து வேலையில் சேர்ந்துகொண்டார்.அவரது நண்பரின் நிறுவனத்தின் பெயர் ‘ஷிகார் அட்வென்சர்ஸ்’. அதில் சேர்ந்து முதல் முறையாக மலையேற்றம் சென்றார். நாங்கள் மலையேற்றம் சென்ற பகுதி அசாம் போராளி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி. அதனால் மிகவும் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவேண்டும். இருப்பினும் என் கனவு எனக்கு உந்துதலாக இருந்தது.என் குழந்தைகளுக்கு மூன்று வயது ஆனதும் அவர்களையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினேன். அவர்களும் பயமின்றி வாழவேண்டும் என்பதே என் ஆசை என்கிறார் ஜூலிமா.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின்கீழ் (MSDE) இயங்கும் Indian Institute of Entrepreneurship கல்வி நிறுவனத்தில் 2010-ம் ஆண்டு சாகசப் பயணத்தில் முறையான வகுப்பில் சேர்ந்து சிறப்பான பயிற்சி எடுத்துக் கொண்டார். ஸ்கில் இந்தியா திட்டத்தின்கீழ் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சேர்ந்து உதவித் தொகையுடன் பயிற்சியும் பெற்றார்.இதற்காக அசாம் அரசாங்கத்திடமிருந்து அவருக்கு உதவித்தொகையும் கிடைத்தது. தன்னுடைய கல்வியையும்,திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டார்.2015-ம் ஆண்டு ஜூலிமாவும் அவரது நண்பர் பூர்ணாவும் சேர்ந்து சாகசப் பயண நிறுவனம் ஒன்றைத் தொடங்கத் தீர்மானித்தனர். ‘கிரீன் ட்ரெக் அட்வென்சர்ஸ்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.ரேஃப்டிங், ட்ரெக்கிங் என தொடங்கிய இவர்களது வணிக செயல்பாடுகள் மலையேற்றம், பாராசெய்லிங், ஜங்கிள் ட்ராக்கிங் என விரிவடைந்தது. மேலும் இவர்கள் முதல் முறையாக ஜிப்லைனிங் அறிமுகப்படுத்தினார்கள். இவர்களின் சாகசப் பயண நிறுவனம் பல்வேறு விருதுகளை வென்று குவித்துள்ளது. மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. கவனத்தை ஈர்த்த 20 இளம் தொழில்முனைவோர்களில் ஒருவராக MSDE ஜூலிமாவை அங்கீகரித்தது.
என் திருமண வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டதும் நான் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். இருந்தபோதும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.என் தந்தை எனக்கு கற்றுத் தந்த துணிச்சல் மட்டுமே என்னிடம் இருந்தது. அதுதான் என் வெற்றியின் அடித்தளம் என்கிறார் ஜூலிமா. தன் தந்தை தன்னை வளர்த்தது போன்றே தன் குழந்தைகளையும் வளர்க்கவேண்டும் என்பதில் ஜூலிமா உறுதியாக இருக்கின்றார்.எனக்கு பயம் என்றால் என்ன என்று தெரியாது. அதனால்தான் என் மகளையும் மலையேற்றம் மற்றும் ரேஃப்டிங் பயிற்சி வகுப்பில் சேர்த்தேன் என்கிறார் ஜூலிமா. குழந்தைகளுடன் இது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜூலிமாவை பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்தனர். பெண்கள் அடங்கி இருக்கவேண்டும் என்றார்கள். ஆனால் ஜூலிமா எதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. இதுபோன்ற கருத்துகளால் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் பெண்களுக்கு தன்னுடைய வாழ்க்கை முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதே அவரது இலட்சியமாக இருந்து வருகிறது. ஜூலிமா துணிச்சலை இறுகப் பற்றிக் கொண்டதால் தான் வெற்றியை வசப்படுத்தி இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.