பிரான்ஸ் நாட்டிலே ஒரு சிறுவன் இருந்தான்.அவனுக்கு 12 வயது இருந்த போது அவனுடைய பாட்டி அவனை அழைத்து, நீ பெரியவனாகி என்ன செய்யப் போகிறாய்?என்று கேட்டார். சிறுவனின் பார்வையிலே தெளிவு இருந்தது,தேடல் இருந்தது,ஆனால் அமைதியாக நின்றான்.பாட்டி அவனுடைய உள்ளங்கையிலே ஒரு கல்லை வைத்து,இது விலை உயர்ந்த மரகதக் கல், மந்திர சக்தி உடையது. நீ இதை வைத்துக் கொண்டால்.இந்த நாட்டின் அரசன் ஆவாய் என்று சொல்கிறார். அதை அப்படியே நம்புகிறான் சிறுவன். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அந்த கல்லை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ‘நான் இந்த நாட்டின் அரசன்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறான்.அரசனாக கற்பனை செய்து பார்க்கின்றான். கற்பனையிலேயே பல திட்டங்களை தீட்டி செயல்படுத்துகின்றான்.பல வருடங்கள் இந்த பழக்கம் தொடர்கிறது.அந்த சிறுவன் இளைஞர் ஆனான், பிரான்ஸ் நாட்டு படை தளபதியானான். அரசன் ஆனான், உலகமே அவனை மாவீரன் நெப்போலியன் என்று போற்றுகின்றது.நெப்போலியன் இறந்தபோது,அவனை மாவீரன் ஆக்கிய,அந்தக் கல்லைத் தேடி எடுத்து சோதித்துப் பார்த்தார்கள். அது விலை உயர்ந்த மரகதக்கல் அல்ல,சாதாரண பச்சை நிற கண்ணாடிக்கல் என்பது தெரிய வந்தது.நெப்போலியனை மாவீரன் ஆக்கியது,மரகதக் கல் அல்ல, மந்திரக்கல் அல்ல,அவனிடத்திலே ஊறிப் போயிருந்த நம்பிக்கையும், சுய ஊக்கமும், முயற்சியும் தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய இலக்கு உறுதியானதாக நம்பிக்கை நிறைந்ததாக இருந்துள்ளது. ஆனால் நம்மில் பலர் இலக்கில் நம்பிக்கை இல்லாமல் அவ்வப்போது அதை மாற்றிக் கொள்கிறார்கள், அதிலிருந்து பின் வாங்குகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னால்,சீடன் ஒருவன் குருவிடம் வந்தான். மிகுந்த ஆர்வத்தோடு அவர் கற்றுக் கொடுத்த அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். அவன் கற்றுக் கொள்வதற்கு இன்னும் சில கலைகள் தான் இருந்தன. மற்ற சீடர்கள் எல்லோரும் அவனை வியந்து பாராட்டினர். அந்த நிலையில் ஒருநாள் குருவிடம் வந்த அந்த சீடன் உங்களிடமிருந்து பல கலைகளைக் கற்று இருக்கிறேன்.அடுத்த நாட்டிலுள்ள குரு இதே கலைகளை வேறுவிதமாகச் சொல்லித் தருகிறாராம்.அதையும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.நான் செல்லலாமா?என்று கேட்டான்.குரு அவனைப் பார்த்துச் சொன்னார்.இரண்டு முயல்களை ஒரே நேரத்தில் துரத்துகிற வேடன் கையில் ஒன்றும் அகப்படாது. அதன் பிறகு ஆழ்ந்து சிந்தித்த சீடன் அங்கேயே தங்கி விட்டான். ஒரே நேரத்தில் பல தொழில்களைச் செய்வான் எதிலுமே முழுமையான வெற்றியைப் பெறுவதில்லை.நாளுக்கு ஒரு சிந்தனை, மாதத்திற்கு ஒரு வேலை, வருடத்திற்கு ஒரு இடம் என்று அலைவோர், வாழ்வின் நிறைவை அடையாமல் போகின்றனர்.
சமூகத்தின் அடிப்படை அமைப்பான, குடும்பத்திற்கு இந்த அணுகுமுறை, அணு அளவும் ஒவ்வாது.நுனிப்புல் மேயும் ஆடு ஒரு புல்லின் முழுச் சுவையைப் பெறுவதில்லை.படிப்பில், பணியில் வாழ்வில் ஆழ்ந்து செல்லாதவர், வாழ்வின் அர்த்தம் புரியாமலேயே இறப்பைத் தழுவுகின்றனர்.அதனால்தான், ஞானத்தோடு வாழ்ந்த முன்னோர், அகல உழுவதை விட ஆழ உழுவது மேல் என்றனர். இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முயற்சிப்பது ஒன்றையும் செய்யாததற்கு சமம் என்கின்றார் சைரஸ் என்ற சிந்தனையாளர். உனக்கு பிடிக்காத துறையில் நீ பணிபுரிந்து வந்தாலும் பிடித்த துறையில் நம்பிக்கையுடன் சாதிக்க முடியும் என்று விரும்பினால் துணிச்சலுடன் பிடித்த துறையில் உனது இலக்கை தீர்மானி, அந்தத் துறையில் உன்னால் வெல்ல முடியும் என்று நம்பு. இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியைச் சொல்லலாம்.சாப்ட்வேர் இன்சினியராக பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்த நிதி யாதவ், ஃபேஷன் துறையில் நுழைந்து, இன்று 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஏ.கே.எஸ் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி, ஃபேஷன் பிராண்ட்டை உருவாக்கி பெண் தொழில் முனைவோராக சாதித்து வருகிறார்.
2006ம் ஆண்டில் ஒரு நாள் நிதி யாதவ், மெரில் ஸ்ட்ரீப்பின் பிளாக்பஸ்டர் “தி டெவில் வியர்ஸ் பிராடா” திரைப்படத்தை பார்த்த பின்பு ஃபேஷன் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்படுகிறது. அதுவே அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறியது. இந்தூரில் பிறந்து வளர்ந்த நிதி, கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்.படிப்பு முடித்த உடன் டெலாய்ட்டில் பணிபுரிந்தார்.அந்த நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நிதியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. அந்த கேள்வி, நீங்கள் கடைசியாக எப்போது அலுவலகத்திற்குச் செல்ல விரும்பினீர்கள்? என்பது அதற்கு அவர் அளித்த நேர்மையான பதில், “ஒருபோதும் இல்லை.” என்பது தான், இதுவே நிறைய மாற்றங்களுக்கு வழிவகுத்தது.
இதைத்தொடர்ந்து,தனக்கு பிடிக்காத வேலையை விட்டு,தனக்கு பிடித்த ஃபேஷன் துறையை தேர்ந்தெடுத்தார். இத்தாலியின் புளோரன்ஸில் உள்ள பாலிமோடா ஃபேஷன் பள்ளியில் ஒரு வருட ஃபேஷன் படிப்பை படித்தார்.படிப்பை முடித்த பின், இத்தாலிய ஃபேஷன் பிராண்டான எமிலியோ புச்சியில் வேலை கிடைத்தது. இருப்பினும், குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணி அவர் இந்தியா திரும்பினார்.2014ம் ஆண்டு மே மாதம், ரூ 3.5 லட்சம் ஆரம்ப மூலதனத்துடன், 18-35 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மலிவு விலையில் சமகால ஆடைகளை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து ஏ.கே.எஸ் என்ற ப்ராண்டை தொடங்கினார். அப்போது நிதிக்கு வயது 25. ஏழுமாதக்கைக்குழந்தையின் தாயாக இருந்தார்.
கைக்குழந்தையுடன் ஆடைகளுக்கான மூலப்பொருள்களை தேடி பயணம் செய்து, கடினமாக உழைத்தும் வந்துள்ளார். அதன் பலனாய் இன்று, அவரது பிராண்ட் மிந்த்ரா, ஃபிளிப்கார்ட், நைகா மற்றும் ஏ.கே.எஸ்யின் சொந்த இணையதளத்திலும் அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து சாதித்து உள்ளார்.மேலும், இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா முழுவதும் அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறார். நாகாலாந்தில் இரண்டு ஆஃப்லைன் கடை களையும் ஏற்படுத்தி உள்ளார். தற்போது இந்த பிராண்டு ரூ.200 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் தொழில் செய்ய போகிறேன் என்று குடும்பத்தினரிடம் அவர் சொன்னபோது முதலில் அதிர்ச்சியடைந்தாலும், அவர்கள் எனக்கு ஆதரவளித்தனர். தொழில்முனைவராக தயார்படுத்திக் கொள்ள, நிதி சர்வதேச ஃபேஷன் பிராண்டான ஜாராவில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்து கொண்டேன் என்கிறார் நிதி.ஏ.கே.எஸ்., தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அவரும் அவரது கணவரும் ஒவ்வொரு வார இறுதியிலும் ஜெய்ப்பூருக்கு கைக்குழந்தை யுடன் மெட்டீரியல்களை வாங்குவதற்காக பயணம் செய்வார்கள்.ஆனால், அங்குள்ள உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்வது அவர்களுக்கு கடினமாக இருந்து உள்ளது.நீங்கள் ஒரு ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்பத்தின் ஆதரவு இல்லையென்றால் வேலை, வாழ்க்கை சமநிலையினை சமமாக கொண்டு செல்வது கடினமானதாக இருக்கும். அந்த வகையில் நிதியின் கணவர் குழந்தையை கவனித்து கொள்வதில் உதவுவதுடன் ஏ.கே.எஸ்.இன் செயல்பாடுகளுக்கும் உதவியுள்ளார் என்பது நிதியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைத்து உள்ளது.
கடந்த ஆண்டு, இந்திய பெண்கள் மாநாட்டில் நிதிக்கு, சிறந்த ஆடை பிராண்ட் ஸ்டார்ட்அப்பிற்கான ‘இளம் பெண் தொழில்முனைவோர்’ விருது வழங்கி கௌரவபடுத்தினார்கள்.நான் எப்போதும் வேலைவாய்ப்பை உருவாக்கி சமூகத்திற்கு பங்களிக்க விரும்பினேன். ஏ.கே.எஸ். இன் ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்றும் அதன் சப்ளையர்களில் சுமார் 60 சதவீதம் பேர் பெண்கள் என்கிறார் பெருமிதத்துடன் நிதி.உங்கள் இலக்கில் உறுதியாக இருங்கள்.வெற்றியை அடைய முயற்சியுங்கள்.வணிக இலக்குகளை அடைவது அல்லது அதிக வளர்ச்சியை அடைவது மட்டுமல்ல. நீங்கள் பெறக்கூடிய வெற்றி உள் மகிழ்ச்சியும், மனதிருப்தியையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார் நிதி.இலக்கில் உறுதியாக இருந்தால் வெற்றியை வசப்படுத்தலாம் என்பது தான் இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.