ஆஸ்திரேலியக் கடலோரம் பவழப்பாறைகள் இருக்கின்றன. அந்தப் பாறைகளின் ஒரு பக்கம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லாமல், சலனமற்று இருக்கும். பார்ப்பதற்குத் தான் அமைதியாகத் தெரியும். ஆனால் நிறமற்று, பொலிவற்றுக் காணப்படும். மறுபக்கத்திலோ ஓயாமல் அலைகள் மோதிக்கொண்டிருக்கும். அலைகள் மோதும் பக்கத்தில் உள்ள பவழப்பாறைகள் அழகாய் வண்ணமுறக் காட்சியளிக்கும். பிரச்னை இல்லாத வாழ்க்கை, பிரச்னைகளுடன் கூடிய வாழ்க்கை இவற்றிடையே உள்ள வேறுபாட்டைப் புரியவைக்க அந்த பவழப்பாறைகள் போதுமானவை.பிரச்னைகளைத் தள்ளிப் போடுவதும், பிரச்னையிலிருந்து நழுவிச்செல்வதும் தீர்வாகாது, அது பிரச்னையைத் தீவிரப் படுத்திவிடும்.ஆனால் பிரச்னைகளை ஆராய்ந்து, தீர்வு காண்பதில் விவேகம் கைகொடுக்கும்.சாலமன் அரசர் தமது அரியணையில் அமர்ந்திருக்க அவருடைய அவைப் பிரதிநிதிகள் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். அப்போது வாயிற் கதவு திறந்து கொள்ள, ஷிபா என்கிற சிற்றரசின் ராணி உள்ளே நுழைந்தாள்.அரசே என்னுடைய நாடு இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது. ஆயினும் தங்கள் ஆற்றலும் புகழும் அங்கே பேசப் படுகிறது. குறிப்பாக தங்களுடைய விவேகத்தைப் பற்றி மக்கள் வியந்து பேசுகிறார்கள் என்றார்.
ராணியாரே, தாங்கள் சொல்வது சரிதான் என்றார் சாலமன். நல்லது தங்களுடைய அறிவுத்திறத்தைச் சோதித்துப் பார்க்க நான் ஒரு புதிரைக் கொண்டு வந்திருக்கின்றேன். நான் அதைத் தங்களுக்குக் காண்பிக்கவா? என்றார் ராணி.பிறகு அவர் இரண்டு கைகளில் ஒரே மாதிரியான இரண்டு மாலைகளை எடுத்து வந்தாள். அந்த அழகிய மாலைகளில் அங்கிருந்தவர்களால் எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை. ராணி சொன்னாள், இரண்டு மாலைகளில் ஒன்று தங்களுடைய பூந்தோட்டத்து மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்டது. மற்றொன்று செயற்கையான மலர்கள் கோர்த்த மாலை ஒரு திறமையான ஓவியன் வடிவமைத்து வர்ணம் பூசி இருக்கிறான். அரசே, தற்போது இதில் எந்த மாலை அசலானது, இதில் எது போலியானது என்பதைத் தாங்கள் எனக்குக் கூற வேண்டும் என்றார்.
சாலமன் அரசர் அந்த மாலைகளைக் கண்டு குழப்பம் முற்றார்.மாலைகளை கூர்ந்து கவனித்தார். புருவங்களைச் சுளித்தார். தன் உதடுகளை கடித்தார். எது உண்மையானது? ராணி மறுபடியும் கேட்டார். அரசர் பதிலளிக்காமல் இருந்தார். உலகத்திலேயே விவேகத்தில் சிறந்த தாங்கள் இந்த சின்ன புதிர் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடாது என்று நம்புகிறேன் என்றாள் அவள். சாலமன் அரசர் தன்னுடைய ஆசனத்தில் சங்கடத்துடன் இருந்தார். இந்த பூக்களை கவனமாகப் பாருங்கள், பார்த்துவிட்டு உங்கள் பதிலை கூறுங்கள் என்றாள் ராணி. அப்போது அரசர் எதையோ ஞாபகப்படுத்திக்கொண்டார். தம்முடைய சன்னலுக்கு வெளியே அழகிய பூக்களுடன் படர்ந்திருந்த திராட்சை கொடிகளை பார்த்தார் அவர். அந்தக் கொடி பூக்களில் தேன் எடுக்க தேனீக்கள் மொய்ப்பது அவருடைய நினைவுக்கு வந்தது.
அவர் பணியாளைப் பார்த்து சொன்னார். சன்னலைத் திறந்து வை என்று.சன்னல் திறக்கப்பட்டது. திறந்த சன்னலுக்குப் பக்கமாய் ராணி கையில் மாலைகளுடன் நின்று இருந்தாள். எல்லோருடைய கண்களும் அரசர் ஏன் சன்னலைத் திறக்கச் சொன்னார் என்று பார்ப்பதற்காகத் திரும்பின. அடுத்த நொடியில் இரண்டு தேனீக்கள் ஆவலுடன் உள்ளே பறந்து வந்தன. அவை நேரே சென்று ராணியின் வலது கையில் இருந்த பூக்களில் அமர்ந்தன. தேனீக்களில் ஒன்றுகூட அவரது இடது பக்கம் போகவில்லை.’ ஷிபா நாட்டு ராணியே அந்த தேனீக்களே தங்களுக்குத் தேவையான பதிலைத் தந்தாயிற்று ‘என்றார் சாலமன்.
அரசரே! தாங்கள் சிறந்த மதியூகி. சராசரி மனிதர்கள், சற்றும் பாராமல் கடந்து சென்று விடுகின்ற சின்னச் சின்ன பொருட்களில் இருந்தும் தங்கள் அறிவை சேர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று வியந்தாள் அந்த ராணி. இவரைப் போல அறிவை விரிவடையச்செய்கிறவர்கள் வெற்றிவாகை சூடுகின்றார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியைச் சொல்லலாம்.ஜம்மு காஷ்மீரில் ஜூன் 6-ம் தேதி திறந்து வைக்கப்பட்ட உலகின் உயரமான பலமான செனாப் பாலத்தின் வெற்றிகரமான கட்டுமானத்தில் மிக முக்கியமானவர் சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜி.மாதவி லதா ஆவார்.
ஜம்மு காஷ்மீரில் ஈபிள் டவர் உயரத்தை (330 மீட்டர்) விடவும் உயரமாக கட்டப்பட்ட ரயில் பாலமான செனாப் பாலத்தை (359 மீட்டர்) கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 6) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.தற்போது உலகின் மிக உயரமான ரயில் பாலமாக அறியப்படும் இந்தப் பாலம், கடந்த ஆட்சிக்காலத்தில், ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியின் குறுக்கே கட்ட 2002-ல் முடிவு செய்யப்பட்டு, 2003-ல் அனுமதி பெறப்பட்டது.அதன்படி, 2004-ல் பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. இருப்பினும், பாலத்தின் உறுதித்தன்மை குறித்து எழுந்த பல்வேறு கேள்விகளால் 2009-ல் பாலத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.
பின்னர், பாலம் கட்டும் பணிகள் 2010-ல் மீண்டும் தொடங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரானது வடக்கு ரயில்வேயின் கீழ் வந்தாலும், மலைப்பகுதி காரணமாக இப்பணிகள் கொங்கன் ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு 2014-ல் ஆட்சி மாறினாலும் பாலம் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியாக, சுமார் 15 ஆண்டுகால கடின உழைப்பில் ரூ.1,486 கோடி செலவில் 1,315 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் அகலம், 359 மீட்டர் உயரத்தில் செனாப் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, உலகின் மிக உயரமான பாலமாக ஜூன் 6-ம் தேதி திறந்துவைக்கப்பட்டது.
இத்தகைய சாதனைமிக்க இந்த இரும்புப் பாலத்தின் வெற்றிகரமான கட்டுமானத்தில் மிக முக்கியமானவர் சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜி. மாதவி லதா ஆவார்.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஏடுகுண்டலபாடு என்ற சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் மாதவி லதா. அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்த அவர், மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு வளர்ந்தார். ஆனால், பொருளாதாரப் பிரச்சினையால் அவரால் மருத்துவம் படிக்க இயலவில்லை.எனவே, பெற்றோரின் அறிவுரைப்படி பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் (IISc) தற்போது பேராசிரியராகப் பணியாற்றிவரும் மாதவி லதா, இந்த செனாப் பாலத் திட்டத்தில் சுமார் 17 ஆண்டுகள் புவி தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்.1992-ல் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங்கில் ஃபர்ஸ்ட் கிளாஸில் பி.டெக் (B.Tech) முடித்த கையோடு, வாரங்கலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் எம்.டெக் (M.Tech) மாணவியாகத் தங்கப் பதக்கம் வென்றார்.
புவி தொழில்நுட்ப பொறியியலில் புலமைவாய்ந்தவரான மாதவி லதா, 2000-ம் ஆண்டு ஐஐடி மெட்ராஸில் புவி தொழில்நுட்ப பொறியியலில் முனைவர் பட்டத்தை முடித்தார்.தொடர்ச்சியாகத் தனது துறையில் சிறப்பாகப் பணியாற்றிய இவருக்கு, 2021-ம் ஆண்டில், இந்தியப் புவி தொழில்நுட்ப சங்கத்தால் அவருக்குச் சிறந்த பெண் புவி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டது.இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அறிவியல் (S), தொழில்நுட்பம் (T), பொறியியல் (E), கலை (A), கணிதம் (M) ஆகிய துறையில் சிறந்து விளங்கும் பெண்களைக் கவுரவிக்கும் வகையில், 2022-ம் ஆண்டில் இந்தியாவின் STEAM என்ற பெயரில் 75 பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். அதில், மாதவி லதாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவராக ஆசைப்பட்டு, நினைத்த துறை கிடைக்காவிட்டாலும், கிடைத்த துறையில் தன் தனித் திறமையை வெளிக்காட்டி, இன்று உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வலுவானதாகவும் வடிவமைத்து, ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்திருக்கும் மாதவி லதாவின் சாதனை மகத்தானது. மாதவி லதா தான் விரும்பிய துறை கிடைக்காவிட்டாலும் கிடைத்த துறையில் கால் பதித்து தனது அறிவை விரிவடையச் செய்து சாதித்துள்ளார். இவருடைய வாழ்க்கை சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு மிகச்சிறந்த உன்னதப் பாடமாகும்