ஐதராபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 2வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 81 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. வெற்றிக்கு பின் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது: ஐதராபாத் மண்ணில் எங்களுக்கு கிடைத்த ஆதரவும், வரவேற்பும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மண்ணின் விருந்தோம்பலால் நெகிழ்ச்சியடைகிறோம். அதேபோல் உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்கியது நிம்மதியளிக்கிறது.
இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்களை தான் அதிகமாக பாராட்ட வேண்டும். தொடக்கம் மற்றும் மிடில் ஓவர்களில் சீராக விக்கெட் வீழ்த்தி அசத்தினர். பேட்டிங்கை பொறுத்தவரை ரிஸ்வான் மற்றும் ஷகீல் அழுத்தத்தை சிறப்பாக எதிர்கொண்டு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தினோம். ஹாரிஸ் ராப் தனது வேகத்தை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.