புதுடெல்லி, நவ.5: ஜார்க்கண்ட்,மகாராஷ்டிரா சட்டபேரவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்றும் பாஜவும்,உள்ளூர் நிர்வாகமும் கடைசி நிமிட தில்லுமுல்லுகளை செய்வதை தடுக்க விழிப்புடன் இருக்கிறோம் என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். ஜார்க்கண்ட்,மகாராஷ்டிரா சட்ட பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் நடந்த அரியானா பேரவை தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணி்க்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி சில மணி நேரம் வரை காங்கிரஸ் முன்னிலை வகித்தது.
அதன் பின்னர் திடீரென பாஜ அதிக இடங்களில் முன்னிலை வகிக்க தொடங்கியது. இதில் மெஜாரிட்டிக்கும் அதிகமான இடங்களில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று பேட்டியளித்தார். அப்போது, அரியானா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் ஜார்க்கண்ட்,மகாராஷ்டிரா தேர்தலில் இந்தியா கூட்டணியின் உத்வேகம் குறைந்து விட்டதாக கூறப்படுவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ்‘‘ அரியானா தோல்வியால் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேகம் குறைந்து விட்டதாக கூறப்படுவது தவறு. காங்கிரசை பொறுத்தவரை அரியானாவில் கிடைத்த முடிவு எதிர்பாராதது.
இரண்டு மாநில பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெறும். மகாராஷ்டிராவில் வலுவான எதிர்க்கட்சி கூட்டணி உள்ளது. ஜார்க்கண்டில் ஜேஎம்எம் கட்சி கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நாங்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தாலும் பாஜவும்,உள்ளூர் நிர்வாகமும் கடைசி நேர தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம் என்பதால் மிகவும் விழிப்புடன் இருந்து வருகிறோம். மகாராஷ்டிராவில் வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மகா விகாஸ் கூட்டணியின் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும். முதல்வர் தேர்வு சுமூகமாக நடைபெறும் என நம்புகிறோம்’’ என்றார்.