Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது திமுகவை அழிக்க கிளம்பியவர்களுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர்: தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. திமுகவை அழிக்க கிளம்பியவர்களுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தஞ்சை மாவட்டத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தஞ்சை மகாராஜா மகாலில் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு இல்ல திருமண விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து பேசுகையில், ‘திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்களே பதிலடி கொடுப்பார்கள். பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜவும், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்வர் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நமது கூட்டணி கட்சி தலைவர்களும், திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றார்.

இதனைத்தொடர்ந்து திருவையாறு திமுக தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கோனேரிராஜபுரம் மெயின்ரோட்டில் 7¼ அடி உயரம் 2¼ அடி அகலத்தில் ரூ.30 லட்சத்தில் அண்ணா, கலைஞர் வெண்கல சிலை, ரூ.10 லட்சம் செலவில் கலைஞர் நூலக கட்டிடம், கண்டியூர் பைபாஸ் சாலையில் கழக பவளவிழாவை முன்னிட்டு 75 அடி உயரத்தில் ரூ.7 லட்சம் செலவில் புதிய கொடி கம்பம் ஆகியவை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றி வைத்து கலைஞர் நூலகம், அண்ணா, கலைஞர் சிலையை திறந்து வைத்து பேசியதாவது: தற்போது வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியில் 200 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெற்று ஆக வேண்டும் என்று தலைவர் கூறியுள்ளார். அதற்கு நீங்கள் அத்தனை பேரும் கழக ஆட்சி சாதனைகளை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். யார் யாரோ வந்து புதுசாக விமர்சனம் செய்கிறார்கள். திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அது பற்றியெல்லாம் நாம் கவலை பட தேவையில்லை. மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

மக்களிடம் போய் கேளுங்கள் மக்கள் சொல்லுவார்கள், திமுக யாராலும் தொட்டுப் பார்க்க, அசைக்க முடியாத இயக்கம். எப்பேர்ப்பட்ட புயலையும் தாங்க கூடிய இயக்கம். சிலர் பிளேடுகளை எடுத்து வருகிறார்கள், நான் திமுக என்ற ஆலமரத்தை வெட்ட போகிறேன் என்று. இது சாத்தியமா? அவர்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஒரே பதில், வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெற்று முதலமைச்சரை மீண்டும் அந்த முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைப்பது தான் எங்களுடைய ஒரே லட்சியம். இவ்வாறு அவர் பேசினார்.

* பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜவும், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்.

* திமுக யாராலும் தொட்டுப் பார்க்க, அசைக்க முடியாத இயக்கம். சிலர் பிளேடுகளை எடுத்து வருகிறார்கள், நான் திமுக என்ற ஆலமரத்தை வெட்ட போகிறேன் என்று. இது சாத்தியமா?