சென்னை: வயநாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா அசன் மவுலானா ஏற்பாட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான சட்டை, லுங்கி, டீ-சர்ட், நைட்டி, துண்டு உள்ளிட்ட துணிமணிகள் மற்றும் 100 மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் திரட்டப்பட்டன. இந்த பொருட்கள் அடங்கிய வாகனத்தை சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று காலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது நிருபர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: வயநாடு மக்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றை தமிழக காங்கிரஸ் கட்சியும், அனைத்து காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் எல்லோரும் கொடுப்பதற்கு முன் வந்திருக்கிறார்கள். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளத்தை நிவாரண தொகையாக வழங்குவதாக அறிவித்திருக்கிறோம். பிரதமர் வயநாட்டிற்கு சென்றால்தான் அதிசயம். அவர் இதுவரை மணிப்பூருக்கு சென்றாரா?. மணிப்பூரில் கலவரம் நடந்து ஆண்டுக்கணக்கில் ஆகிறது. குறைகளை கேட்பதற்கு கூட ஆளில்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பிரதமரோ, ஒன்றிய அமைச்சர்களோ யாரும் அங்கு செல்லவில்லை. வயநாட்டில் பேரிடர் நடந்த மறுநாளே ராகுல்காந்தி களத்தில் நின்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டித் தருவதாக உறுதி அளித்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.