திருவள்ளூர்: திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருநின்றவூர் பெரிய காலையூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் திருநின்றவூர் விசிக நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி 26வது வார்டு கவுன்சியராகவும், திருவள்ளூர் நகராட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். கோமதி ஸ்டீபன் ராஜ் தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். வேறு நபருடன் பழகி வந்த கோமதியை கணவர் ஸ்டீபன்ராஜ் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயராம் நகர் அருகே தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கோமதியுடன் ஸ்டீபன்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆண் நண்பர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கோமதியை வெட்டியதாகக் கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார். ஸ்டீபன்ராஜை கைது செய்த போலீசார் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.