புதுடெல்லி: தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து, துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.
மேற்கண்ட உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தனர்.
இதில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை(26ம் தேதி) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் விசாரிக்க உள்ளனர்.