சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் ஆளுநரின் செயலை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக கூறி, இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.) சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 9 பல்கலைக்கழகங்களின் வளாகத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் அருண் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நிரூபன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். இதில் சென்னை மாவட்ட செயலாளர்கள் மிருதுளா, பாரதி, நிதிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ‘தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் கல்லூரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை ஆளுநர் தன்னிச்சையாக எதேச்சதிகாரத்தோடு அறிவித்திருக்கிறார் என்றும், அதோடு மட்டுமல்லாமல் வழக்கத்திற்கு மாறாக 3 பேர் கொண்ட குழுவிற்கு பதிலாக 4 பேர் கொண்ட குழுவாக அமைத்திருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினர்.