சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை காலியாக உள்ளன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமன முறைகேடுகள் மற்றும் ஊதிய பிரச்னைகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. மகளிர் ஆய்வு மையம் உள்ளிட்ட பல இடங்களில் 6 மாதங்களுக்குமேல் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
தற்போது, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று போராடி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 160 அரசு கல்லூரிகளில் சுமார் 8000க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள், கடந்த 3 ஆண்டுகளாக காலியாக உள்ளன. ஆய்வக உதவியாளர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ளன. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்பிடவும், அதுவரை தற்காலிகமாக, சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர் குழுவை நியமித்து உயர்கல்வி மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்த வலியுறுத்துகிறேன்.