Saturday, January 25, 2025
Home » வெற்றியை தரும் காரிய சித்தி மாலை

வெற்றியை தரும் காரிய சித்தி மாலை

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது காரிய சித்திமாலை. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து, உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இந்த துதியை இருவேளைகளிலும் (காலை,மாலை) பக்தியோடு சொல்லி வந்தால், நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.

தொடர்ந்து எட்டு நாட்கள் பாராயணம் செய்து வந்தால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால், `அஷ்டமாசித்தி’ கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும்மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.இந்த கார்ய சித்தி மாலையை காஷ்யப மஹரிஷி, வட மொழியில் இயற்றியிருந்தார். அதனை கச்சியப்ப முனிவர், தமிழில் மொழி பெயர்த்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.

பாடல் 1:

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பாடல் 2:

உலகம் முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து
சரணம் அடைகின்றோம்.

பாடல் 3:

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதியை பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.

பாடல் 4:

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி
அறிவிப்பான் எவன் அப்போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் 5:

செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் 6:

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் 7:

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன்
வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாடல் 8:

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப்
பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

You may also like

Leave a Comment

sixteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi