சென்னை: வெற்றிகரமாக தரை இறங்கிய சந்திரயான்-3யை சென்னையில் பல்வேறு இடங்களில் நேரலையில் திரையில் பார்த்து பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சந்திரயான்-3 விண்கலம் நேற்று மாலை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதனை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இஸ்ரோவின் இணையதள பக்கத்தில் பார்த்தும், தொலைக்காட்சி மூலமாகவும் பார்த்து மகிழ்ந்தனர். சென்னையை பொறுத்தவரை கேந்ர வித்யாலயா, லயோலா கல்லூரி, லேடி வில்லிங்டன், தரமணி கணித அறிவியல் நிறுவனம், அரசுப்பள்ளிகள் என பல இடங்களில் நேரலையில் ஒளிபரப்பு செய்தனர். கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் எல்.இ.டி. டிவியில் திரையிடப்பட்டு சந்திரயான்-3 விண்கலம் இறங்குவதை நேரலை செய்யப்பட்டது இதனை பார்ப்பதற்கு பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகள் என 300க்கும் அதிகமானோர் வந்து இருந்தனர்.
வழக்கமாக சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போதுதான் இதுபோன்று ஏற்பாடுகள் பிர்லா கோளரங்கத்தில் செய்யப்பட்டிருப்பது வழக்கம். ஆனால் நேற்று சந்திரயான்-3 விண்கலம் தரை இறங்குவதை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எல்.இ.டி. திரையில் பார்த்து மகிழ்ந்த பள்ளி மாணவர்-மாணவிகள் கூறுகையில்: ஒரு இந்தியனாக எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான்-2 தோல்வி அடைந்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. அதனால் சந்திரயான்-3 தரை இறங்கிய ஒவ்வொரு நிமிடங்களும் எங்களுக்கு படபடப்பாக இருந்தது. தற்போது உலக நாடுகள் அனைத்தும் நம்மை திரும்பி பார்க்க போகிறது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.