சென்னை: 2024-25-ம் கல்வியாண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச்.) மற்றும் இளநிலை உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு முடிந்து, கடந்த மாதம் 7-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பி.வி.எஸ்சி. -ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி, சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு இன்றும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நாளையும் (செப்.5), பி.டெக் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நாளை மறுநாளும் (6ம் தேதி) நடைபெற உள்ளது. கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாக வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும். மேலும் பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் நடக்க இருக்கிறது. அதற்கான பதிவு மற்றும் விருப்பத்தை இன்று முதல் செப்.7ம் தேதி வரை இணையதளம் வாயிலாக மாணவர்கள் பதிவு செய்யலாம்.