சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் கல்வியாண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச்.) மற்றும் இளநிலை உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில், பி.வி.எஸ்சி. -ஏ.எச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பி.வி.எஸ்சி. – எ.எச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 4ம்தேதி நடக்கிறது. இந்த படிப்புகளுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு 5ம் தேதியும், பி.டெக் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 6ம் தேதியும் நடக்கிறது. கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாக வேப்பேரி சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
பி.வி.எஸ்சி. – எ.எச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் நடக்க இருக்கிறது. அதற்கான பதிவு மற்றும் விருப்பத்தை செப்.4 முதல் செப்.7ம் தேதி வரை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களை www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.