சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்ததோடு, பின்னணி குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ். கலைஞர் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். கலைஞரும், ராஜேஷின் திருமணம் முதலிய அவரது இல்ல நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு வாழ்த்துவது வழக்கம்.
கலைஞர் மறைவுற்றபோது, ‘‘தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களிலும் அவர் ஓர் அங்கம்’’ என நெகிழ்ச்சியோடு பேசி தனது இரங்கலை தெரிவித்தவர் ராஜேஷ் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். திரைத்துறையில் அவரது நீண்ட அனுபவத்தை கருத்தில்கொண்டு, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அவரை நியமித்தோம். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.