சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் 8ம் தேதி முதல் மழை தீவிரமாக பெய்ய தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை இருந்தாலும் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இதற்கிடையே, ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை இருந்தது. சில இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், இயல்பைவிட சற்று குறைவாகவும் இருந்தது. வெயிலை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.
வேலூர், பாளையங்கோட்டை 103 டிகிரி, ஈரோடு, கரூர், பரங்கிப்பேட்டை 102 டிகிரி, திருச்சி, தஞ்சாவூர், சென்னை 100 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரியில் இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். இன்று ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.