கோவை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன. வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கடக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 16ம் தேதி வரை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து இந்த 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு இன்று தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகை தர உள்ளனர்.
அதன்படி கோவை மாவட்டத்திற்கு ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையினர், 2 மாநில பேரிடர் மீட்பு படையினர் வர உள்ளனர். முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக 60 பேர் கொண்ட குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் களத்தில் உள்ளன. இவர்கள் இன்று கோவை வந்து, அங்கிருந்து அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதியான வால்பாறைக்கு செல்கின்றனர். இதேபோல் 2 மாநில பேரிடர் மீட்பு படையினர் மதியம் கோவைக்கு வருகை தர உள்ளனர். இவர்கள் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.