Friday, February 23, 2024
Home » வினைகளை தீர்க்கும் விநாயகன்

வினைகளை தீர்க்கும் விநாயகன்

by Kalaivani Saravanan

காணாபத்யம்

பொதுவாக இந்து சமயத்தின் தெய்வ வழிபாடுகளை ஆறு விதமாகப் பிரித்து அறு சமய நிர்ணயம் (ஷண் மதம்) செய்திருக்கின்றார்கள். சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவம், திருமாலை முழுமுதற்கடவுளாகக் கொண்ட வைணவம், முருகனை முழுமுதல் கடவுளாகக் கொண்ட கௌமாரம், சக்தியை முதற் கடவுளாகக் கொண்ட சாக்தம், விநாயகரை முழு முதற்கடவுளாகக் கொண்ட காணாபத்யம், சூரியனை முழுமுதல் கடவுளாகக் கொண்ட சௌரம் என்று இந்த ஆறு பிரிவுகளைச் சொல்லுவார்கள்.

இதில் காணாபத்யம் என்கின்ற சமயம் முழுக்க முழுக்க விநாயகரையும் அவருடைய பிரதாபங்களையும் பேசி, அவரை ஏக தெய்வமாக வழிபடுகின்ற ஒரு மரபு. விநாயகரின் பெருமைகளை (அவரே முதல் கடவுள் என்ற கொள்கையை) விநாயக புராணம், முத்கலப் புராணம், ஹேரம்ப உபநிஷதம், கணபதி உபநிஷதம் முதலான நூல்கள் வலியுறுத்தி கூறுகின்றன.

எத்தனை திருநாமங்கள்?

காணாபத்யம் கணபதிக்குரிய தனி வழிபாடாக இருந்தது என்றாலும்கூட இன்றைக்கு அது சைவ சமயத்தில் ஒரு பிரிவாகவே இருக்கிறது. விநாயகர் வழிபாடு என்பது இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இருந்தாலும், பிரத்தியேகமாக தென்னிந்தியாவிலும் நேபாளத்திலும் மிக அதிகமாக இருக்கிறது. விநாயகர் என்றாலே எல்லா தெய்வங்களுக்கும் முதன்மையானவர், வெற்றியைத் தரும் நாயகர் என்று பொருள். (வி=இல்லை; நாயகன் =தலைவன்: தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன்.

தனி முதல்வன்) கணங்களுக்கு தலைவராக இருப்பதால் கணபதி என்றும், யானை முகம் கொண்டிருப்பதால் கஜமுகன் என்றும், சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் பிள்ளை அதுவும் தலைப் பிள்ளை என்பதாலும், பிள்ளையைப் போல எளிமையான வழிபாட்டுக்குரிய தெய்வம் என்பதாலும் பிள்ளையார். விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் `ஆர்’ என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார். தடைகளை எல்லாம் பொடிப் பொடி ஆக்குவதால் விக்னேஸ்வரன் என்றும், கணேசன், சர்வாயுதர், மயூரேசர், கபிலர், விகடர், என்றும் பல
பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

நான்கு யுகங்களிலும் பிள்ளையார்

‘கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.

1. கிருதயுகம்

காஸ்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து, அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருதயுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் `மகாகடர்’.

2. திரேதாயுகம்

அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் `மயூரேசர்’ என்ற திருநாமம்

3. துவாபரயுகம்

`கஜானனன்’ என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.

4. கலியுகம்

சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து, விநாயகன் என்ற நாமத்தோடு தடங்கல் களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருகிறார்.

கஜாசுரன் தவம்

விநாயகர் அவதாரம் பற்றிப் பல்வேறு கதைகள் இருக்கின்றன. சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன் சிவபெருமானை நோக்கிப் பல வருடங்களாகக் கடுந்தவம் புரிந்தான். அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து, “வேண்டிய வரம் கேள்” என்றார். அதற்குக் கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்கவடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப்பெற்றான்.

இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, மகாவிஷ்ணுவிடம் உதவி கோரினார். பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் வயிற்றில் உள்ள சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார்.

வெற்றிக்கு வழிகாட்டும் பூஜை

வேதங்களின் சுருக்கம் “ஓம்” எனும் பிரணவம். அந்த பிரணவத்தின் குறியீடுதான் விநாயகரின் திருவுருவம். அவர் திருமுகம் பாருங்கள். தலைபெரிதாக இருக்க, கீழே வலஞ்சுழியாக துதிக்கை இருக்க, பிரணவஸ்வரூபம் அப்படியே பிரதிபலிக்கும். அவரே ஆதார மூர்த்தி என்பதால் மூலாதார மூர்த்தி என்று அழைக்கின்றனர். பிள்ளையாருக்கென்று தனி பூஜை உண்டு என்றாலும்கூட மற்ற தேவதைகளுக்கான பூஜையாக இருந்தாலும் சரி, உலகியல் ரீதியான வைதீக பூஜைகளாக இருந்தாலும் சரி, எந்தப் பூஜையிலும் முதன்மையாக பிள்ளையார் பூஜை எனப்படும் ஆராதனை செய்துவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும். விநாயகர் பூஜை என்பது தடைகளை நீக்கி வெற்றிக்கு வழிகாட்டும் பூஜை.

சுக்லாம் பரதரம்

பிள்ளையார் பூஜைக்கு “சுக்லாம் பரதரம்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி பிள்ளையாரை ஆவாகனம் செய்து, மூல மந்திரத்தைச் சொல்லி வழிபடுவார்கள். வைணவத்திலும் இதே மந்திரம்தான். ஆனால், அடுத்த இரண்டு வரி மாறும். அவர்கள் விஸ்வக்சேன ஆராதனம் என்பார்கள். வைணவத்தில் கஜானனர் என்றொரு அமைப்பு உண்டு. தும்பிக்கை ஆழ்வார் என்று பல தலங்களில் மாடங்களில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இனி சுக்லாம் பரதரம் மந்திரம் என்ன என்று பார்ப்போம்.

“சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே’’
சுக்லாம் பரதர – வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
விஷ்ணு – என்றால் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவர்.
சசிவர்ண – நிலா போன்ற நிறம் உடையவர்.
சதுர்புஜ – நான்கு கை கொண்டவர்.

ப்ரஸந்த வதந – மலர்ந்த முகம் உடையவர். அவரை தியானிப்போம் என்பது பொருள்.

விநாயகர் திருவடி, வயிறு, கரங்கள்

1. திருவடி

ஆன்மாவைப் பொருந்தி நின்று மல, கன்ம, மாயைகளைத் தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின்
திருவடிகளாக இருக்கின்றன.

2. பெருவயிறு

ஆகாசமானது எல்லாப் பொருள்களுக்கும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

3. ஐந்துகரங்கள்

பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுகிரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது. எனவே, இவர் ருத்ரர் ஆகிறார். மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே, இவரே சர்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்.

ஏன் குட்டிக் கொள்கிறோம்?

`சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம்’ என்று ஐந்து வார்த்தைகள் சொல்லி ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கள் பெறலாம். மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என்பார்கள். இவற்றிற்கிடையே சுவாச நடப்பு நடக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே சிரசில் குட்டிக் கொள்வதால் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்பு வழியாக நம் சுவாசத்தோடு பாயும். அது நம் மூளையின் நரம்புகளைத் தூண்டி மிகத் தெளிவாகச் சிந்திக்க வைக்கும். நினைவுத் திறனை வளர்க்கும். ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கியக் குறைவுகளை சீராக்கும். மொத்தத்தில் நல்வாழ்வு தரும்.

எளிமையான வழிபாடு

பிள்ளையார் இருப்பிடமோ, பூஜையோ, நிவேதனமோ எளிமையானது. உருவம்கூட வேண்டியதில்லை. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தைகூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார். சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடலாம்.

எளிதாக கிடைக்கக் கூடிய அறுகம்புல் மிக விருப்பம். காட்டில் கிடைக்கக் கூடிய எருக்கம்பூவை தலையில் சூடி கொள்வார். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும். கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்யலாம்.

தோப்புக்கரணம்

ஸ்ருதி என்பது வேதங்களைக் குறிக்கும். காதுகளையும் குறிக்கும். அதனால், நல்ல விஷயங்களை காதால் கேட்பதை “சிரவணம்” என்றார்கள். பக்தியிலேயே முதன்மையான பக்தி, சிரவண பக்திதான். அதைப் போல செல்வங்களிலே தலையான செல்வம் செவிச்செல்வம்தான். ஞானம் என்கின்ற விஷயத்தை, ஒரு உருவமாகப் பார்த்தால் காதுகள் என்றுதான் வரும்.

எனவேதான் வேதப் பொருளாகிய விநாயகரை வணங்குகின்ற பொழுது ஸ்ருதி எனும் காதுகளைப் பற்றிக் கொண்டு தோப்புக் கரணம் போடுகின்றோம். தோப்புக் கரணம் என்பது யோக சாஸ்திரத்தில் ஒன்றாகவும் மிகச் சிறந்த பலன்களை அளிப்பதாகவும் சொல்கிறார்கள். விநாயகர் வழிபாட்டு முறை அகத்தைக் காப்பது போலவே (soul), புறமாகிய உடல் நலனையும் (health) காக்கிறது என்பதற்கு தோப்புக்கரணம் ஒரு எடுத்துக்காட்டு.

பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – அதன்
துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து

– என்றொரு பாடல் உண்டு.

பெரும்பாலோர் எதை எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக ‘‘பிள்ளையார் சுழி’’ போட்டு விட்டே எழுதத்தொடங்குவர். பிள்ளையார் சுழி ஒரு வட்டமும் ஒரு கோடும் இணைந்து இருக்கும். பூஜ்ஜியமான வட்டத்தை ‘‘0’’ பிந்து என்றும், தொடர்ந்து வரும் கோட்டை ‘‘நாதம்’’ என்றும் கொள்கின்றனர். எனவே பிள்ளை யார் சுழியை ‘‘நாதபிந்து’’ என்பர்.

விந்து சுழியாகவும், நாதம் நீண்ட கோடாகவும் காட்சி அளிக்கிறது. பிள்ளையார் சுழி(உ) என்பது உலகத்தைக் குறிக்கிறது. அதில் உள்ள சுழி உலகத்தையும், நீண்ட கோடு அதன் இயக்கத்தையும் குறிக்கிறது. சுழி என்பது ஜனன மரண சுழற்சியையும், அதில் இருந்து வெளியே இழுக்கப்பட்ட கோடு, முக்தியையும் குறிக்கிறது. அதாவது ஜனன மரண சுழற்சியில் இருந்து விடுபடுதலைக் குறிக்கிறது. பிள்ளையாருடன் சிவ சக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எந்த வித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது நம்பிக்கை.

தலையில் குட்டிக் கொள்வது ஏன் என்பது தெரியுமா?

இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அகத்தியர் வடநாட்டில் இருந்து தென் இந்திய நாட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவர் கமண்டலத்தில் கொண்டு வந்த காவிரி நதி நீரை காகம் வடிவில் வந்து விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் விநாயகர் அகத்தியர் முன் வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.

அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை காக்க காவிரியை உருவாக்க அப்படிச் செய்ததாகக் கூறினார். தன் தவறுக்கு வருந்திய அகத்தியர் தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகர் வழிப்பாட்டில் தலையில் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது. நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். விநாயகர் முன்பு பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள்.

விநாயக விரதங்கள்

ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக் கான விரத நாட்கள் உண்டு. சுக்கில பட்ச (வளர்பிறை) சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள். சுக்கில பட்ச சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியை `நாகசதுர்த்தி’ என்றும், ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வருகின்ற சதுர்த்தி ‘சங்கடஹர சதுர்த்தி’ ஆகும்.

விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ச சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. விநாயகர் சதுர்த்தி வழிபாடு என்னென்ன தரும் என்பதை இந்தப் பாடல் சொல்கிறது.

“அல்லல்போம், வல்வினைபோம் அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம் நல்ல
குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்’’

இப்படி விநாயகரின் பெருமைகளையும், விரத மகிமைகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். 

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi