வேப்பூர்: வேப்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை பாடியை சேர்ந்தவர் மணி மகன் சபரிநாத் (36). இவர் தனது நண்பர்களான பள்ளிகரணை பகுதியை சேர்ந்த பிரபாகரன் (36), மதுரவாயலை சேர்ந்த உதயபாஸ்கர் (38), தரமணியை சேர்ந்த ஜீவன்ராஜ் (20), ஆதம்பாக்கத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் (35) ஆகியோருடன் பழனி முருகன் கோயிலுக்கு நேற்று சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே இன்று அதிகாலை 1 மணியளவில் சென்றபோது, திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரமாக இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் சபரிநாத், பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் காயத்துடன் அலறி துடித்தனர்.
தகவலறிந்து வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.