நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ஆக்ரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் நகர பகுதியில் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நகர பகுதிகளில் குப்பை தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் குப்பையை வீசுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சன் பகுதி முதல் அண்ணா பஸ் நிலையம் வரை உள்ள நடைபாதையை சிலர் ஆக்ரமித்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்களுக்கு பூங்கா அருகே நாஞ்சில் பஜார் என்று உருவாக்கி 52 கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துக்கொடுத்து உள்ளது. இந்த கடைகளில் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனால் நடைபாதையில் எந்தவித வியாபாரமும் நடக்காமல், பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வேப்பமூடு ஜங்சன் பகுதியில் நடைபாதையில் வியாபாரிகள் தங்களது வியாபார கடைகளை அமைத்து உள்ளனர். நடைபாதையில் பொருட்களை விரித்து போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் நடைபாதையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் அதிக அளவு பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆகவே காலை, மாலை வேளையில் வேப்பமூடு ஜங்சன் முதல் அண்ணாபஸ் நிலையம் வரை உள்ள நடைபாதையை அதிக அளவு பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் நடைபாதை வியாபாரிகள் வேறு இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது சில வியாபாரிகள் பழம் உள்ளிட்ட பொருட்களை நடைபாதையில் போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நடைபாதையில் செல்லும் பெண்கள், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே நடைபாதை வியாபாரிகள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு நாஞ்சில் பஜாரில் இடங்களை ஒதுக்கி அவர்களது வாழ் வாதாரத்தை காக்க முன்வர வேண்டும். இதுபோல் வேப்பமூடு ஜங்சன் பகுதியில் நடைபாதையில் அமைந்துள்ள போக்குவரத்து போலீசார் பயன்படுத்திய சிக்னல் பாயின்றையும் மாற்றவேண்டும். என்றனர்.