ஏழாயிரம்பண்ணை, நவ.9: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 35000க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றி தாயில்பட்டி, எதிர்கோட்டை, மடத்துப்பட்டி, விஜயகரிசல்குளம், மீனாட்சியாபுரம், கோட்டையபட்டி, கண்டியாபுரம், சூரார்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெம்பக்கோட்டை தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பகுதியை சுற்றிலும் 150க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ஒரு சில செவிலியர்களுடன் கூடிய துணை ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
எனவே இப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய விபத்துகள் ஏதேனும் நேரிட்டாலோ அருகில் உள்ள தாயில்பட்டி, சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.மேலும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்படும் திடீர் வெடி விபத்துகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு வசதிகளும் இல்லாததால் சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.