ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் சட்டி கண்டெடுக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அகழாய்வில் பல நிற பாசி மணிகள், சுடுமண் விளையாட்டு வட்ட சில்லுகள், தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், குழந்தைகள் விளையாட்டு குவளை, குழந்தைகள் விளையாடும் பொம்மை, விலங்குகளின் எலும்புகள், கொம்பு, தங்க அணிகலன் கிடைத்தன.
மேலும் தற்போது சுடுமண்ணால் ஆன முழு வடிவ சிதைந்த நிலையில் சட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘அகழாய்வில் ஏற்கனவே பானைகள் கண்டெடுக்கப்பட்டது. தற்போது ஒரே இடத்தில் அதிகமாக முழுமையான, உடைந்த பானைகள், சட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த மண்சட்டிகள் உணவு பொருட்கள் வைப்பதற்கு பயன்பட்டிருக்கும்’’ என்றார்.