வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையத்தின் வழியாக படுக்கை வசதி கொண்ட 15 அதிநவீன் சொகுசு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்தாக அரசு பஸ் போக்குவரத்து இருந்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு வழித்தடங்களில் புதிய பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பழைய பஸ்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஏசி பேருந்துகள், மின்சார பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக விரைவு போக்குவரத்து கழகத்திற்காக 150 புதிய பஸ் சேவைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ₹90 கோடி 52 லட்சம் ரூபாய் செலவில் 150 பிஎஸ் 6 ரக பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. பஸ்கள் அனைத்தும் இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள 150 அதிநவீன சொகுசு பஸ்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் புதிய பஸ் நிலையத்தின் வழியாக படுக்கை வசதி கொண்ட 15 அதிநவீன் சொகுசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் சென்னை-பெங்களூரு, திருப்பதி-கன்னியாகுமரி, சென்னை-திருப்பத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் படுக்கை வசதி கொண்ட 15 சொகுசு பஸ்கள் இயக்கப்படுவதாக விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.