வேலூர்: வேலூர் காகிதப்பட்டறையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், வணிக வளாக கட்டிடங்களை மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இன்று அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது. வேலூர் மாநகரில் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்தவிர மாநகராட்சி சாலைகளிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் என்பதற்கு இதுவரை சரியான தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் வேலூர்-ஆற்காடு சாலை காகிதப்பட்டறை தொடங்கி சத்துவாச்சாரி வரை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோரப்பகுதிகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் அகற்றவில்லை.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்த முறையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 32 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இவை அனைத்தும் வணிக வளாகங்களாக பயன்பாட்டில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. எனவே, அந்த கட்டிடங்களுக்கு வழங்கப்பட்ட மின்இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மாநில நெடுஞ்சாலைத்துறையும், வருவாய்த்துறையும் மின்வாரியம் மற்றும் மாநகராட்சிகளை கேட்டுக்கொண்டன. ஆனாலும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற முன்வரவில்லை. எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறையும், வருவாய்த்துறையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலஅவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கின.
தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் வேலூர் தாசில்தார் செந்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள் வேலூர் காகிதப்பட்டறைக்கு வந்தனர். முன்னதாக அங்கு டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் (வடக்கு) சீனிவாசன், சத்துவாச்சாரி ரவி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் உள்ளவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதுடன், பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் தங்களை இங்கிருந்து வெளியேற்றக்கூடாது என்று கூறி கண்ணீர் விட்டு கதறினர். ஆனால் போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதையடுத்து அவர்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து 2 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு 32 கட்டிடங்களை இடிக்கும் பணி காலை 9 மணியளவில் தொடங்கியது. இந்த பணி இன்று மாலைக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரகாஷிடம் கேட்டபோது, ‘32 நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டதும், இந்த இடம் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் அடையாள கற்கள் நடப்படும். மற்றபடி சாலையை இங்கு விரிவாக்கம் செய்யப்படாது. அதுபற்றி பின்னர் தெரிவிக்கப்படும்’ என்றார். வேலூர் காகிதப்பட்டறையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் அந்த பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நடவடிக்கையால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.