சென்னை: கண்ணதாசன் எழுதிய நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று வேலூர் கம்பன் கழகம் சார்பில் நடந்த கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.வேலூர் கம்பன் கழகம் மற்றும் ஊரீசு கல்லூரி தமிழ்துறை சார்பில் ஊரீசு கல்லூரியில், கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் ஜி.விசுநாதன் தலைமை தாங்கினார். தமிழ்ச்செம்மல் சோதி, உழவன் கே.எம்.பாலு, வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஞானவேலு, கல்லூரி முதல்வர் ஆனிகமலா ப்ளாரன்ஸ், தமிழ்த்துறை தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். கம்பன் கழக செயலாளர் சோலைநாதன் வரவேற்றார்.
கம்பன் கழக தலைவரும் விஐடி துணைத்தலைவருமான ஜி.வி.செல்வம் நோக்க உரையாற்றினார். வழக்கறிஞர் ராமலிங்கம் எழிலுரையாற்றினார். பேராசிரியர் அப்துல்காதர் சிறப்புரையாற்றினார். விழாவில், கண்ணதாசன் மகன் அண்ணாதுரை கவுரவிக்கப்பட்டார். இதையடுத்து கண்ணதாசன் மகன் அண்ணாதுரை பேசினார்.
தொடர்ந்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது: ஊரீசு கல்லூரிக்கு வருவது எனது தாய் வீட்டிற்கு வருவதுபோல் உள்ளது. நான் முதலில் ஏறிய மேடையும் இந்த மேடைதான். கண்ணதாசனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை அழைத்து பொதுக்கூட்டமும் நடத்தியிருக்கிறேன். உண்மையை அப்படியே பேசக்கூடியவர். அவர் கவிதைகளில் பிடித்தது போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் இதுதான் கண்ணதாசன்.
மொத்தம் 25 திரைப்படங்களில் நடித்துள்ளார். மாணவர்கள் நேரம் கிடைக்கும்போது கண்ணதாசனின் நூல்களை படிக்க வேண்டும். அவர் மொழி பிரச்னை பற்றியும் கவிஞர் எழுதியுள்ளார். ஆங்கிலம் முக்கியமானவை எனவும் எழுதியுள்ளார். கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டிலேயே நம் மாவட்டத்தில் தான் சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கவிஞர் இலக்குமிபதி, கலைமகள் இளங்ேகாவன், ஊரீசு கல்லூரி பாதுகாப்புதுறை தலைவர் மாறன், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கம்பன் கழக பொருளாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார். தொடர்ந்து மக்கள் மன்றம், இலக்கிய மன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முன்னதாக கம்பன் கழகம் சார்பில், கண்ணதாசன் பிறந்தநாள் விழா மலரை ஜி.விசுவநாதன் வெளியிட, கண்ணதாசன் மகன் அண்ணாதுரை பெற்றுக்கொண்டார்.
* மனித உறவு, சமுதாய நிலையை கூறியவர் கண்ணதாசன்: ஜி.வி.செல்வம்
விஐடி துணை தலைவரும், வேலூர் கம்பன் கழக தலைவருமான ஜி.வி.செல்வம் பேசியதாவது: எதற்காக இந்த விழா, கம்பன் கழகத்திற்கும், கண்ணதாசனுக்கும் என்ன தொடர்பு. கம்பனை படித்தேன், கடவுளை படித்தேன் என்றார் கண்ணதாசன், அடுத்த பிறவியில் கம்பனின் மகனாக பிறக்க வேண்டும் என்றார். அதற்காகத்தான் இந்த விழா.
இந்த தலைமுறை அவரை அறிய வேண்டும். கவிஞர், பாடலாசிரியர், ஆத்திகவாதி, நாத்திகவாதி, இலக்கியவாதி, ஆன்மிகவாதி, அரசியல் வாதி என்று பல கூறலாம். தனது கருத்துக்களை எளிய தமிழில் பட்டிதொட்டியெல்லாம் பரவச்செய்தார். அவர் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தற்போதுள்ள கவிஞர்கள் பாடல்கள் எழுதுவதற்கு 2 மாதங்கள் ஆகிறது.
ஆனால் கண்ணதாசன் 20 நிமிடங்களில் பாடல்கள் எழுதிவிடுவார். வெற்றி மட்டுமல்ல தோல்வியையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பவர் கண்ணதாசன். அண்ணாவை, நலந்தானா பாடலில் நலம் விசாரித்தவர். காமராஜர் கட்சியில் சேர பாடல்மூலம் தெரிவித்தார். மனித உறவு, சமுதாய நிலையை எடுத்துக்கூறியவர். நதிகள் பிறக்கும் இடம் பல இடமாக இருக்கலாம், ஆனால் சேரும் இடம் கடல்.
அதுதான் மதம், இதனை இன்றைய மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதத்தாலும், சாதியாலும் யாரையும் பிரிக்க முடியாது என்று அன்றே சொன்னார். நிறைய பேர் பணம் தான் வாழ்க்கை, பதவிதான் வாழ்க்கை என்று உள்ளனர். அவர் சொல்வதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.