வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து குறைவால் தினந்தோறும் ஏறுமுகத்தில் தக்காளி விலை உயர்ந்து கொண்டே உள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படு கின்றன. அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளை வாங்க வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சித்தூர் போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் வருகின்றனர். அதிகாலை 3 மணி முதல் மார்க்கெட்டில் வியாபாரம் தொடங்குவதால் அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு வர வேண்டிய காய்கறிகள் வரத்து கடந்த மாதம் குறைவாக இருந்தது. இதனால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்தது. மற்ற காய்கறிகள் குறைந்த நிலையில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினந்தோறும் தக்காளி விலை மட்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் கிலோவிற்கு ரூ.50 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பெட்டி தக்காளி ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய ரக தக்காளி ரூ.100, 120க்கு விற்பனை செய்யப்படுகிறது.தக்காளி விலை உயர்வால், பல உணவகங்களில் தக்காளி சாதம் விற்பனை செய்யப்படுவதில்லை. சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது, 100 கிராம், 250 கிராம், 500 கிராம் என குறைந்த அளவில் பெண்கள் வாங்கி செல்கின்றனர். தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ள னர்.