வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக குழந்தையை கடத்திய பெண் மற்றும் கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரவட்லா மலை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி சின்னி, கடந்த ஜூலை 27ம் தேதி இரவு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. இதையடுத்து ஜூலை 28ம் தேதி காலை சின்னி பிரசவ வார்டிற்கு மாற்றப்பட்டார்.
பின்னர் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் கோவிந்தன் உணவு வாங்குவதற்கான வார்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது குழந்தை அழுத்த சமயத்தில் தாயிடம் இருந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக வாங்கியுள்ளார். குழந்தையின் தாய் சின்னு சாப்பிடும் சமயத்தில் அடையாள தெரியாத பெண் குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.
குழந்தை கடத்தல் தொடர்பாக வேலூர் டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. குழந்தை கடத்தப்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. மேலும் குழந்தையையே அப்பெண் பெங்களூருவிற்கு எடுத்து சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 3 தனிப்படைகள் பெங்களுருவில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமான வீட்டில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய பெண் வேலூரை சேர்ந்தவர் எனவும் அவர் கர்நாடகாவில் வேலை செய்துவரும் வீட்டில் உள்ளோருக்கு குழந்தையின்மை காரணமாக பச்சிளம் குழந்தையை கடத்தியதாக தெரியவந்தது. இது தொடர்பாக கடத்திய பெண் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மூவர் பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.