வேலூர்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேலூர் டோல்கேட் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நிலக்கடலை 80 கிலோ மூட்டை அதிகபட்சமாக ரூ.9017க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் டோல்கேட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, ஊசூர், சோழவரம், அரசம்பட்டு, பென்னாத்தூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் அவைகளை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பல்வேறு ரக நெல் மூட்டைகளை டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து பணத்தை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மட்டும் விற்பனை கூடத்திற்கு மகேந்திரா 606 ரக நெல் அதிகபட்சமாக ரூ.2,325க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கே 45 ரக நெல் ரூ.1339க்கும், கோ 51 ரக நெல் ரூ.1039-ரூ.1456க்கும், கோ 55 ரக நெல் ரூ.1569-ரூ.1597க்கும், ஆர்என்ஆர் ரக நெல் ரூ.1439-ரூ.2325க்கும், நர்மதா ரக நெல்ரூ.1539-2325க்கும், அமோகா ரக நெல் ரூ.1667-ரூ.2259க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், நிலக்கடலை 80 கிலோ மூட்டை குறைந்தபட்சம் ரூ.5669க்கும், தரத்துக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.9017க்கும் விற்பனையானது.
எள் 80 கிலோ குறைந்த பட்சம் ரூ.8539க்கும், அதிகபட்சம் ரூ.8888க்கும், தேங்காய் கிலோவிற்கு ரூ.63.90 முதல் ரூ.87.90க்கும், கொள்ளு 100 கிலோ ரூ.5711-ரூ.5,877க்கும், உளுந்து 100 ரூ.6268-ரூ.7068க்கும் விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வேலூர் டோல்கேட் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு நிலக்கடலை வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 10 மூட்டைகள் நிலக்கடலைகள் விற்பனைக்கு வந்த நிலையில், வரத்து அதிகரித்து நேற்று ஒரேநாளில் 42 மூட்டைகள் நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பழனி தெரிவித்தார்.